மாணவர்களின் சகலதுறை முன்னேற்றத்திலும் மகிழ்ச்சி கண்டவர் ஆசிரியை இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம்
மாணவர்களின் நன்மதிப்பையும் சமூக கௌரவத்தையும் பெற்றவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திருமதி இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் அவர்கள். யாழ்ப்பாணம்
கரவெட்டியில் கீரிப்பல்லி என்ற ஊரை சொந்த இடமாக கொண்ட இவர்
யாழ் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் வர்த்தகம் மற்றும் கணக்கியல் பாடவிதானங்களில் ஆசிரியராக நீண்டகாலமாக பணிபுரிந்து ஒரு சிறந்த ஆசிரியை இன்று விடைபெற்றார் என்பது கவலையான செய்தி.
தான் கற்ற துறை கடந்து மாணவர்களை இதர பாடவிதானங்கள் துறைகளிலும் ஈடுபடுத்துவதில் முன்னின்று உழைத்த ஆசிரியர்களில் ஒருவர். கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான மாணவர் மன்ற செயற்பாடுகளில் முன்னணியில் திகழ்ந்த இவர் மாணவர் மன்றம் நடைபெறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பேச்சு கட்டுரை கவிதை மற்றும் தாள லய நாடகம் போன்றவற்றை திரு யோகராஜா ஆசிரியர் (கருணை யோகன்) அவர்களுடன் இணைந்து அரங்கேற்றிய ஒரு ஆசிரியை. இவ்வாறாக தமிழ் மொழியிலும் தடம்பதித்த ஒரு சிறந்த ஆசிரியை இவர்.
ஒரு காலத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கான சஞ்சிகை ஒன்று வெளியிட வேண்டும் என்பதற்காக, பாடசாலையில் அதிபர் திரு சிவபாதசுந்தரம் அவர்களிடம் முன்மொழிந்து, ஒவ்வொரு மாணவர்களையும் அவர்களது படைப்புகளை எழுதி வகுப்பு ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறு கூறி அவற்றின் திருத்தங்களின் பின்னர் அந்த படைப்புகளை சஞ்சிகையாக உருவாக்குவதற்கு முதற்படியாக ஊக்குவித்தவர்.மாணவர்களின் படைப்புகளும் மாணவர்களின் திறமைகளும் ஒருங்கே வெளிவர வேண்டும் என்ற ஒரே நோக்கமே அவர் சிந்தனையாக விளங்கியது. இது மாணவர்களின் முன்னேற்றத்தில் எவ்வளவுதூரம் உறுதுணையாக இருந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டு.
மாணவர்களின் கலை படைப்புகளுக்கும் உறுதுணையாக இருந்த ஒரு ஆசிரியை மட்டுமல்ல இவர். ஆசிரியையின் இலக்கிய சுவையும் இலக்கிய ரசனையும் அபாரமானது.
திருமதி இராஜேஸ்வரி அவர்கள் கல்லூரி பாடசாலை மைதானம் அளவில் குறைவாக இருந்த காலப்பகுதியில் பாடசாலையின் மைதானத்தை விஸ்தீரணம் செய்யும் நோக்குடன் பாடசாலையில் கலைவிழா ஒன்றை நடத்த வேண்டும் என்று முன்மொழிந்து அந்தக் கலை விழாவினை நடத்திக் காட்டியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயம். அந்த கலைவிழாவில் எங்களை சிறப்பாக நடிக்க வைத்து பாடவைத்து ஆடவைத்து எங்களின் கலை ஆர்வத்தை மக்கள் மத்தியில் வழிகாட்டிய ஒரு சிறந்த ஆசிரியை. உடுப்பிட்டி தொகுதி ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடைபெறுகின்ற கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி கவிதைப் போட்டி ஆகிய போட்டிகள் பெண்களுக்கான பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து திரு தர்மலிங்கம் ஆசிரியர் திரு யோகராஜா ஆசிரியர் திரு சபாரட்ணம் ஆசிரியர் அவர்களுடன் இணைந்து எமது பெயர்களை அந்தந்த பாடசாலைகளுடன் போட்டிக்கான பட்டியலில் இணைத்து எங்களை பாடசாலை போட்டிகளில் முன்னிறுத்திய ஒரு மகா மேதையாக திருமதி இராஜேஸ்வரி ஆசிரியை திகழ்ந்தார். யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற மாவட்ட ரீதியான கவிதைப் போட்டிகளில் எம்மையெல்லாம் பங்கு கொள்ளச் செய்து யாழ் மாவட்ட ரீதியான கவிதைப் போட்டியில் எம்மை வெற்றி பெறச் செய்த பங்கு ராஜேஸ்வரி ஆசிரியை அவர்களை சாரும் என்றால் மிகையாகாது.
அதுமட்டுமல்ல விக்னேஸ்வரா கல்லூரி வேதியல் பாடங்களுக்கான விஞ்ஞான ஆய்வு கூடம் ஒன்று உபகரணம் குறைவாக இருந்த காலங்களில் தனது முயற்சியினால் விஞ்ஞான அலுவலகத்துக்கு தேவையான சிறிய சிறிய உபகரணங்களையும் மற்றும் உயிர்வகை இனங்களையும் பாடசாலையின் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு வழங்கி உதவிய உன்னதமான சேவையை நல்கிய ஒரு மிகச்சிறந்த எதிர்கால சிந்தனை உள்ள நல்ல ஆசிரியையாக விளங்கியவர் ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் அவர்கள்.
நிறைவான காலங்களில் இயற்கையோடு அமையும் வாழ்வு போன்ற நூல்களை எழுதியிருந்தார். நமக்கான,நமது ஆரோக்கிய வாழ்வுக்கான தீர்வுகள் அனைத்தும் நம்மை சுற்றியே இருக்கின்றன என்று அந்த நூலின் வாயிலாக எழுதியிருந்தார்.
புலம்பெயர் நாடுகளிலும் அடுத்த தலைமுறை நோக்கிய சிந்தனையில் சிறுவர்களுக்கான அறநெறிக்கதைகள் போன்ற நூல்கள் அதற்கு சாட்சியாக அமையும். அத்தொடு மனித வாழ்வில் இறை சிந்தனையின் முக்கியத்துவம் மற்றும் மூச்சுப்பயிற்சி போன்றன எவ்வளவு முக்கியமானது என்பதை பல சந்தர்ப்பங்களிலும் அவர் சுட்டி நிற்கத்தவறவில்லை. சைவ சித்தாந்த சிந்தனைகள் மற்றும் திருமூலரின் திருமந்திரத்தினூடாக மக்கள் வாழ்வில் பெறக்கூடிய பயன்கள் பற்றி அடிக்கடி அவர் எடுத்துச்சொல்வார்.
தன் வாழ்நாள் காலங்களில் நல்ல ஒரு சிந்தனையாளராக, மாணவர்களுக்கான நல்லாசிரியராக, தமிழுலத்தின் ஒரு சிறந்த நூலாசிரியராக நிறைவான வாழ்வு பெற்றவர் திருமதி இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் அவர்கள்.
எழுதியவர் – கரவையூர் தயா
தீபம் தொலைக்காட்சியில் ஆசிரியை திருமதி இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் அவர்களுடன் உரையாடிய பதிவை மேலே பார்க்கலாம்.
ஆசிரியர் அவர்களுக்கு வெற்றிநடை இணையம்,வெற்றிநடை நேரலை ஆகிய ஊடகங்களும் இதய அஞ்சலிகளை பதிவு செய்கிறது.