சைவத்துக்கும் தமிழுக்கும் அரும்பணியாற்றிய சைவப்புலவர் ஆசிரியர் நவரட்ணம் அவர்கள்

ஆலயங்கள் முதல் பாடசாலைகள் வரை தன் பணியை சைவத்துக்கும் தமிழுக்கும் ஆற்றிய சைவப்புலவர் , திரு நவரட்ணம் ஆசிரியர் அவர்கள் எம்முடன் இன்று இல்லை என்ற செய்தி நம்ப மறுக்கிறது.

ஆலயத்திருவிழாக் காலங்களில் சைவ சமயம் சார்ந்த பல சொற்பொழிவுகளில் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக சிறப்பாக கருத்துகளை விதைக்கவல்ல மிகச்சிறந்த சொற்பொழிவாளர் சைவப்புலவர் திரு நவரட்ணம் அவர்கள்.

பாடசாலை மாணவர்களுக்கு, அவர்கள் சைவ சமயத்தவர்களாக இருந்தால் அதன் அடையாளங்களை தரித்திருக்க வேண்டிய முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்தியம்பி வழிப்படுத்திய ஆசிரியராக மிளிர்ந்தவர். குறிப்பாக திருநீறு ,சந்தனம் என்பன சைவ சமயத்தின் அடையாளங்கள் என்பதும், ஒரு சைவசமயத்தவனாக அதன் முக்கியத்துவங்களை அறிந்தவனாக வாழ வேண்டும் என்பதை மாணவர்களுக்கும் சொல்லி வழிப்படுத்தி ,அதன்படி வாழ்ந்து காட்டிய பெருமைக்குரியவராக ஆசிரியர் அவர்கள் மிளிர்கிறார்.

யாழ்ப்பாணம் கரவெட்டியை பிறப்பிடமாகக்கொண்ட ஆசிரியர் திரு நவரட்ணம் அவர்கள் , ஹாட்லிக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியராகவும் இருந்தவராவார். கல்லூரியில், நவராத்திரி, குருபூசை தினங்கள் போன்ற சைவ சமயம் சார்ந்த விசேட நிகழ்வுகளில் மாணவர்களை அங்கு கூடியளவு பங்கெடுக்க ஏதுவாக வழிப்படுத்தியவராவார்.

நகைச்சுவையாக பேசுவதும் அதனூடாக மாணவர்களை தம்வசமாக்கி,மாணவர்களுக்கு கற்பிப்பதில் ஆசிரியருக்கு நிகர் அவர் மட்டும் தான்.

ஆசிரியரின் மறைவு சைவத்துக்கும் தமிழுக்கும் கொடுக்கும் இழப்பு என்பதை யாரும் மறுத்துவிடலாகாது.

சைவப்புலவர் திரு நவரட்ணம் ஆசிரியர் அவர்களின் மறைவால் சமூகத்துடன் இணைந்து வெற்றிநடையும் அஞ்சலிகளை பகிர்ந்துகொள்கிறது.