ஈரானுக்கு ஆதரவாகவா டெல்லியிலிருக்கும் இஸ்ராயேல் தூதுவராலயத்தினருகில் குண்டு வெடிக்கப்பட்டது?
சுமார் ஒரு கி.மீ தூரத்தில் பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றிக்கொண்டிருக்கும் அதே நேரம் இஸ்ராயேலியத் தூதுவராலயத்துக்கு அருகே குண்டு வெடிப்பு நடாத்தியதை “வரவிருக்கும் ஒரு பெரிய அழிவுக்கு முன்னுரை” என்று எழுதிய கடிதம் தூதுவராலயத்துக்குக் கிடைத்திருக்கிறது.
குண்டு வெடிப்பு நடக்கச் சில நிமிடங்களின் முன்னர் அப்பகுதியில் இருவர் வாகனத்தில் வந்திறங்கும் படங்கள் இந்தியப் பொலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது. அக்குண்டு வெடிப்புப் பெரும் சேதமெதையும் ஏற்படுத்தவில்லை எனினும் தமது அமைச்சு அந்தத் தூதுவராலயத்தில் வேலை செய்பவர்களெவருக்கும் ஆபத்துக்கள் வராமல் பாதுகாப்பு ஒழுங்கு செய்திருப்பதாக இஸ்ராயேலியப் பாதுகாப்பமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
தூதுவராலயத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கடந்த வருடம் தொலைதூரத்திலிருந்து குறிவைக்கப்பட்ட கருவிகளால் கொல்லப்பட்ட ஈரானிய இராணுவத் தலைவர், மற்றும் அணு ஆயுத விஞஞானி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஜைஷ் உல் ஹிந்த் என்ற ஒரு தீவிரவாத இயக்கம் குறிப்பிட்ட குண்டுத் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றிருப்பதாகப் பின்னர் வந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. அவற்றிலிருக்கும் உண்மை பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்