ஈரான் தனது பக்கத்தில் எதையும் செய்யாமலே அமெரிக்கா வர்த்தகப் பொருளாதாரத் தடைகளை நீக்காது, என்றார் ஜோ பைடன்.

அணுசக்தித் தயாரிப்பில் ஈரான் கைக்கொள்ளவேண்டிய கட்டுப்பாடுகளை அந்த நாட்டின் அரசு நடைமுறைப்படுத்தாதவரையில் அமெரிக்கா தன் பக்கத்தில் போட்டிருக்கும் தடைகளை நீக்கப்போவதில்லை என்று ஜோ பைடன் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கமெனி சமீப காலத்தில் பல தடவைகள் அமெரிக்கா தடைகளை நீக்கும்வரை தாம் தொடர்ந்தும் தமது அணு சக்தித் தயாரிப்பைத் தொடரப் போவதாகக் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிக் கேட்ட கேள்விக்கே பைடன் அப்பதிலை அளித்திருந்தார்.

சீனா, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் அமெரிக்காவும் சேர்ந்த நீண்ட காலப் பேரம் பேசல்களின் பின்னர் 2015 இல் ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கான யுரேனியத் தயாரிப்பில் ஈடுபடுவதில்லை என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. குறிப்பிட்ட ஒப்பந்தம் உண்மையிலேயே ஈரான் தன்னைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் போர் நிலைமையை உண்டாக்குவதைத் தடுக்கவில்லை என்ற காரணத்துடன் 2018 இல் டொனால்ட் டிரம்ப் அவ்வொப்பந்தத்திலிருந்து அமெரிக்காவின் சார்பில் விலகிக்கொண்டார். அதன் பின்னர் ஈரானைப் பலவீனப்படுத்தி மீண்டும் பேரம்பேச வரவழைக்கும் நோக்கத்தில் அந்த நாட்டின்மீது பல வர்த்தக, பொருளாதாரத் தடைகள் போடப்பட்டிருக்கின்றன.

ஜோ பைடன் பதவியேற்க முன்னரே ஈரான் தனது யுரேனியத் தயாரிப்பை ஐந்து மடங்கால் அதிகரித்ததாகத் தெரிவித்தது. தொடர்ந்தும் அந்த அளவு அணு ஆயுதத்தைத் தயாரிக்கப் போதுமானதாக இல்லாவிடினும் கூட ஏற்கனவே ஒப்பந்தத்திலிருக்கும் அளவுக்கு ஈரான் திரும்பும்வரை எந்த நடவடிக்கைகளையும் ஈரானுக்குச் சார்பாக எடுக்கத் தான் தயாராக இல்லை என்பதையே ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.

பெப்ரவரி 21 ம் திகதிக்குள் அமெரிக்கா தனது தடைகளை நீக்காவிட்டால் குறிப்பிட்ட யுரேனியத் தயாரிப்பு மையங்களைக் கண்காணிக்கச் சர்வதேச ஆராய்வாளர்களை அனுமதிக்கப்போவதில்லையென்று ஈரான் எச்சரித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *