ஹொங்கொங் குடிமக்கள் பலருக்கு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் – சீனா உடனேயே பதிலடி கொடுக்கிறது.
ஹொங்கொங்கில் 2020 கோடையில் சீனா தனது புதிய பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து 1997 வரை ஹொங்கொங்கில் பிறந்தவர்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கொடுக்கப்போவதாக பிரிட்டன் அறிவித்திருந்தது. அதற்குப் பதிலடியாக அப்படியான கடவுச்சீட்டுக்களை ஹொங்கொங்கில் ஏற்றுக்கொள்ளமாட்டோமென்று அறிவிக்கிறது சீனா.
2020 ம் ஆண்டில் ஆரம்பத்தில் சீனா ஹொங்கொங் தனது நாட்டின் ஒரு பகுதியே என்று நிலை நாட்டும் சட்டங்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. அதன் மூலம் ஹொங்கொங் மக்கள் அதுவரை அனுபவித்து வந்த பல மனித உரிமைகள் சூறையாடப்பட்டன. உலகின் பல நாடுகளின் கண்டனத்தைப் பெற்ற அந்த நடவடிக்கைகளை எதிர்நோக்க பிரிட்டன் அரசு ஹொங்கொங் தனது நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்த 1997 ம் ஆண்டுவரை பிறந்தவர்கள் தமது குடும்பத்துடன் பிரிட்டனுக்கு வந்து அங்கே பிரிட்டிஷ் குடியுரிமைக்கு (BNO passport) விண்ணப்பிக்கலாமென்று அறிவித்திருந்தது.
அதன் மூலம் சுமார் 3 மில்லியன் ஹொங்கொங் மக்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கிடைக்கும் சந்தர்ப்பமிருக்கிறது. முதல் கட்டமாக அவர்கள் பிரிட்டனுக்கு சுற்றுலா விசாவில் வந்து அங்கே ஐந்து வருடங்கள் தங்கி, வேலை செய்து அதன் பின்னர் பிரிட்டிஷ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதே பிரிட்டனின் சலுகை.
ஜனவரி 31 ம் திகதி முதல் ஹொங்கொங் மக்கள் இரட்டைக் குடிமக்களாக பிரிட்டிஷ் கடவுச்சீட்டுடன் அங்கு பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோமென்று சீனா அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்