உத்தர்காண்ட் பனிப்பாறைகளால் ஏற்பட்ட அலையால் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடும் படலம் தொடர்கிறது.
உத்தர்கண்டில் சமோலி பிராந்தியத்தில் ஞாயிறன்று இயற்கையழிவால் உண்டான வெள்ளப்பெருக்கால் இறந்தவர்களின் 28 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சுமார் 170 பேரைக் காணவில்லையென்று குறிப்பிட்டு மீட்பு வேலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
சமோலி பிராந்தியத்தில் நிரந்தரப் பனிமலை உடைந்து நதியினுள் விழுந்ததா அல்லது நதியருகேயிருக்கும் உறைபனி மிகப்பெரிய அளவில் சரிந்து நீருக்குள் விழுந்ததால் பெரும் அலை ஏற்பட்டு வழியிலகப்பட்டதையெல்லாம் அடித்துக்கொண்டு போனதா என்பது பற்றி ஒரு பக்கமாக புவியியல் விஞ்ஞானிகளிடையே வாதப் பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன.
மீட்புப் படையினருடன், அப்பிராந்தியத்திலுள்ளவர்களும் சேர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பகுதியிலிருக்கும் அணையையடுத்திருக்கும் இரண்டு மின்சார உற்பத்தி நிலையங்களின் குகைகளுக்குள் சிலர் தப்பி ஒளித்திருந்தது தெரியவந்திருக்கிறது.
அப்படியான ஒரு குகைக்குள்ளிருந்து சுமார் ஒரு டசின் பேர் மீட்கப்பட்டிருக்கின்றனர். அருகேயே கட்டுப்பட்டுக்கொண்டு இருக்கும் இன்னொரு குகைக்குள் மேலும் 30 – 40 பேர் தப்பியோடி மாட்டிக்கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. அந்தக் குகையின் வாசலை நோக்கி மீட்புப்பணிகள் நடந்து வருவதாகப் பொலீசார் தெரிவிக்கின்றனர்.
சாள்ஸ் ஜெ. போமன்