ஜெனீவா பாடசாலையில் தொற்று 1,600 மாணவர் தனிமைப்படுத்தல்.
சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின்(International School of Geneva) ஆயிரத்து 600 மாணவர்கள் உட்பட இரண்டாயிரம் பேர்பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சர்வதேச பாடசாலையின் ஒரு பிரிவான Châtaigneraie campus வளாகத்தில் இருவர்புதிய ஒமெக்ரோன் வைரஸ் தொற்றுக்கு இலக்கானதை அடுத்தே மாணவர்களும் பாடசாலை அலுவலர்களும் உட்பட 2 ஆயிரம் பேரைத் தனிமைப்படுத்தும் முடிவைஜெனீவா மற்றும் வாட் (Vaud) சுகாதார அதிகாரிகள் எடுத்துள்ளனர். தென் ஆபிரிக்காவில் இருந்து திரும்பிய ஒருவருக்கும் அவருடன் தொடர்புபட்ட இன்னொருவருக்குமே ஒமெக்ரோன் திரிபுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அது பெரும் சமூகப்பரவலாக மாறுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கைநடவடிக்கையாகவே தனிமைப்படுத்தல் நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.அனைவரும் வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதிதாகத் தொற்றுக்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை.
உலக சுகாதார அமைப்பினால் கடந்த வாரம் ஒமெக்ரோன் எனப் பெயரிடப்பட்ட புதிய வைரஸ் திரிபு உலகின் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது.
தடுப்பூசி ஏற்றியோர் மற்றும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானோர் என்ற வேறுபாடுஇன்றி அது அனைவரையும் பீடிப்பதாகப்பூர்வாங்க ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன.ஒமெக்ரோன் பரவுவதை முதன் முதலில் அறிவித்த நாடான தென் ஆபிரிக்காவின் தொற்று நோயியல் நிபுணர்களது தகவலின்படி ஏற்கனவே கோவிட் தொற்றுக்குள்ளானவர்களது உடலில் இயற்கையாகத் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி (natural immunity) ஒமெக்ரோன் தொற்றினைத் தடுக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது.
ஒரே தடவையில் முப்பதுக்கும் மேற்பட்ட பிறழ்வுகளை எடுக்கின்றது என்று கூறப்படுகின்ற அந்த திரிபின்ஓர்மம், வேகம், குணங்குறி, தடுப்பூசி எதிர்ப்புத் திறன் என்பவற்றை அறிந்து கொள்வதற்கான தீவிரமான ஆய்வுகள் உலகெங்கும் மருத்துவ அறிவியலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலகை மிரட்டும் புதிய திரிபின் அறியாத பக்கங்கள் அடுத்தடுத்த வாரங்களில் தங்களுக்குத் தெரிய வந்துவிடும் என்று அறிவியலாளர்கள் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
இந்தக் கட்டத்தில் “பதற்றம் வேண்டாம். சரியான பெறுபேறுகள் வரும்வரை மிகுந்த எச்சரிக்கையுடன் தயாராக இருப்போம் “என்று கூறியிருக்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் (Soumya Swaminathan).
குமாரதாஸன். பாரிஸ்.