அபு இப்ராஹிம் அல் – ஹஷிமி தனது வீட்டில் வெடித்த குண்டால் குடும்பத்தினருடன் கொல்லப்பட்டான்.
அபு பக்கீர் அல் – பக்தாதி என்ற காலிபாத் கனவுத் தீவிரவாதிகளின் தலைவனின் பின்னர் அந்த இயக்கத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட அபு இப்ராஹிம் அல் – ஹஷிமி அமெரிக்க அதிரடிப் படையின் தேடலின்போது கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.
“எங்கள் இராணுவத்தின் துணிவான தாக்குதலால் அபு இப்ராஹிம் அல் – ஹஷிமியைப் போர்க்களத்திலிருந்து ஒழித்துக்கட்டினோம் இதன் மூலம் உலகம் மேலும் பாதுகாப்புள்ளதாகியிருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
அமீர் முஹம்மது சாய்த் அப்துல் ரஹ்மான் அல்-மௌலா என்ற பெயரிலும் அறியப்படும் இவன் அமெரிக்க படைகள் தனது வீட்டைக் குறிவைத்ததை அறிந்ததும் தானே அங்கிருந்த வெடிகுண்டைச் செயற்பட வைத்ததால் அந்த வீட்டில் இருந்த 13 பேரும் இறந்தார்கள். சுமார் இரண்டு மணி நேரமாக நடந்த இந்தத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் எவரும் இறக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டது.
சிரியாவின் இட்லிப் நகரில் ஒரு வீட்டில் அவர்கள் வாழ்ந்து வந்ததாகவும், அவ்வீட்டுக்கருகில் அமெரிக்க இராணுவத்தினர் ஹெலிகொப்டர்களுடன் இறங்கி அந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் தெரிகிறது. இறந்தவர்களில் ஆறு பிள்ளைகளும், நான்கு பெண்களும் அடங்குவர்.
சாள்ஸ் ஜெ. போமன்