அந்த நொடியில்

“ஐயோ! வேண்டாங்க, அதுக்குள்ள அந்த முடிவுக்கு போகாதீங்க! நான் சொல்றத கேளுங்க. நாம இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பாப்போங்க. எடுத்த எடுப்பிலேயே யாரும் வாழ்க்கையில முன்னேறியதா சரித்திரம் இல்ல”

மன்றாடினாள் தவமலர்.

“அப்போ நான் எந்த முயற்சியும் எடுக்காமதான் இவ்வளவு நாளா சும்மா இருந்தேனு சொல்றியா?; வாழ்க்கையில எதிர்நீச்சல் போடத் தெரியாதவன்னு நினைச்சிட்ட;  என்னைக் கையாளாகாதவன்னு சொல்லாம சொல்ற அப்படிதானே?” எரிந்து விழுந்தான் தேசிகன்.

“அப்படியெல்லாம் உங்கள நான் நினைக்கிலங்க. இன்னும் புது முயற்சி ஏதும் செய்து பாத்திட்டு அது சரியா வர்லனா அப்ப நான் உங்க முடிவ  ஏத்துக்கிறேங்க”. “அது மட்டும் முடியாது; அதுக்கெல்லாம் இப்ப நேரமுமில்ல. எவ்வளவோ செய்தாச்சி. யாரு யாரு காலிலையோ விழுந்தும் பார்த்தாச்சு. இனியும் என் தன்மானம் மற்றொரு இழிவான பேச்சுக்கும் ஏச்சுக்கும் இடந்தராது. இங்க பாரு மலரு, உனக்கு என் முடிவுல இஷ்டம் இல்லன்னா நீ ஒதுங்கிக்கோ. ஆனா, பிள்ளைகள உன்கிட்ட விட்டுட்டுப் போக மாட்டேன்” என முடிவாகச் சொன்னான் தேசிகன்.

 “சரிங்க, உங்க முடிவுதான் என் முடிவும். ஆனா, இன்னும் ஒரே ஒரு நாள் உங்க முடிவ நிறுத்தி வையுங்க; எனக்காக இந்த ஒரு உதவிய மட்டும் செய்யுங்க போதும்” என்று கெஞ்சினாள் தவமலர். “ஒரு மாசமா செய்ய முடியாதத ஒரு நாளுல எப்படி செய்வ. மந்தரத்தால மாங்காய வரவழைக்கற மாதிரியில்ல வாழ்க்கை” எனச் சீறிய தேசிகன் தன் அன்பு மனைவியின் பரிதாப நிலையைக்கண்டு சம்மதித்தான். நிம்மதிப் பெருமூச்சுவிட்ட தவமலர் தான் வாழ்ந்த நல்வாழ்வைத் திரும்பிப் பார்த்தாள்.

தேசிகனும் தவமலரும் காதலித்துத் தத்தம் குடும்பத்தினரின் சம்மதமின்றிப் பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்கள். இப்பொழுது மூன்று வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் மகளுமென அளவான குடும்பத்தோடு இன்பமாக மலாக்கா நகரையொட்டிய தாமான் முகிபா எனும் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். தேசிகன் முதலில் கனவுந்து ஓட்டுநராக இருந்தான். பின் முடிதிருத்தும் தொழிலில் அனுபவம் இருந்ததால் விலைக்கு வந்த ஒரு முடிதிருத்தும் கடையை வாங்கித் தொழிலை நடத்த ஆரம்பித்தான்.

வாடிக்கையாளர்கள் அதிகம் இருந்ததால், முதலில் உதவியாக இரு இந்திய நாட்டு வேலையாட்களை அமர்த்தினான். அதில் நல்ல இலாபத்தைப் பார்த்ததால், அருகிலுள்ள மற்ற இரண்டு குடியிருப்புப் பகுதிகளிலும் வாடகைக்கு முடிதிருத்தும் நிலையம் அமைத்து, அங்கே பணிபுரிய இந்திய நாட்டவர்கள் அறுவரை வரவழைத்து, வேலைக்கமர்த்தித் தன் வியாபாரத்தைப் பெரிதாக்கினான்.  இல்லத்தரசியான தவமலர் வீட்டிலேயே தையல் தொழிலையும் பார்த்துக் கொண்டு, கணவனுக்கு உதவியாகக் கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொள்வதோடு குடும்பத்தையும் சிறப்பாக வழிநடத்தி வந்தாள்.

குறுகிய காலத்தில் வியாபாரம் பெருக  வீடு, வாசல், பல இடங்களுக்குச் சென்றுவர விலையுள்ள வாகனம், வங்கி வைப்பு எனச் சொத்துபத்தும் பெருகியது. பிரிந்த சொந்தபந்தங்கள் இணைந்தன; நண்பர்களும் பெருகினர். சமூகத்தில் நல்ல பேரோடும் மதிப்போடும் வாழ்ந்தனர். யாரும் சற்றும் எதிர்ப்பார்க்காத இத்தருணத்தில்தான் உலக நாடுகள் சிலவற்றை அச்சுறுத்தி வந்த கோறனி எனும் கொடுங்கோலன் நம் நாட்டின் சீரையும் சிறப்பையும் அழிக்கத் தொடங்கினான். மக்களின் வருமானம் தடைபட்டது; வாழ்வாதாரம் சீர்குழைந்தது; வாழ்வு கேள்விக்குறியானது. பலர் நோயால் பீடிக்கப்பட்டு மரணமுற்றனர்; நாடே தலைகீழானது.

அரசாங்க ஊழியர்கள் இதிலிருந்து தப்பித்துக் கொண்டனர்; காரணம் அவர்களில் பலர் கோவிட் நோய்க்கெதிரான முன்களப் பணியாளர்களாகவும், கற்றல் கற்பித்தலிலும் ஈடுபட்டவர்கள். அவர்களில் பலர் இல்லத்திலிருந்தே வேலை செய்ததால் ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனால், சொந்த வேலை செய்பவர்களின் நிலையோ பரிதாபத்துக்குரியது. வீட்டுக்கடன், வாடகைக்குத் தங்கியுள்ளோர்  வாடகைக் கடன், வாகனக்கடன், வீட்டுச் செலவு எனப் பலவற்றிற்கு ஈடு செய்ய இயலாமல் ஈராண்டுகளாக அவர்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது.

தேசிகன் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. கொடிய நோயின் தாக்கம் ஒரு புறம்; வருமான இழப்பு மறுபுறம்; மாதந்தோறும் கட்ட வேண்டிய வங்கிக் கடன்கள்; வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளப் பாக்கிகள், வீட்டுச் செலவுகள் எனச் சேர்த்து வைத்த பணம் யாவும் ஏழெட்டு மாதங்களில் கரைந்தே போயின. அரசாங்கம்  வியாபாரிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஓரிரு முறை  கொடுத்த பணமும் தீர்ந்து போக, மனமுடைந்து போனான் தேசிகன்.

. “கவல படாதீங்க இந்த இக்கட்டான வேளையில கடவுளப் போல கைகொடுக்க இணையம் இருக்கு. துன்பப்பட்ட பல பேரு இன்னிக்கு  வாழ்க்கையில நல்லா வர்ரதுக்கு அது துணையாயிருக்கு. நாமும் ஏதாவது செய்வோமே” என்றாள் தவமலர். “இணையம் வழியா நாம என்ன செய்ய முடியும், அதுவும் இந்த முடக்க காலத்துல” என்று விரக்தியோடு கேட்டான் தேசிகன்.

“எனக்கு ஒரு யோசன தோணுதுங்க. நான்தான் நல்லா சமைப்பேனே; ஏன் நாம இருவருமே சேர்ந்து கொஞ்ச நாளைக்கு இந்த வியாபாரத்த செய்யக்கூடாது. நிறைய பேரு அவங்க அவங்க செய்த சமையல இப்படிதான் இணையத்துல போட்டு வித்து வராங்க. நாமும் முயற்சி செய்துதான் பார்ப்போமே! மேலும், மக்கள் வெளிய போக முடியாம தவிக்கிற இந்த நேரத்தில, நிச்சயமா நமக்கும் ஆதரவு கிடைக்கும்னு நம்பறேன். நான் சமைச்ச உணவையும் அதோட விலையையும் இணையத்துல போடறேன். நமக்கு ஆர்டர் வர்ர உணவ நீங்க கொண்டு சேர்த்துட்டு பணம் வாங்கிட்டு வந்துடுங்க. நாமும் கொஞ்ச காச பாத்த மாதிரி இருக்கும். என்னங்க நான் சொல்றது ஓகேவா?” எனக் கேள்விக்குறியோடு முடித்தாள் தவமலர்.

“நல்ல யோசனையாதான் இருக்கு. முயற்சி செய்துதான் பார்ப்போமே. வியாபாரம் நல்லா வந்தாதான் குடும்பத்த ஓட்ட முடியும்” எனத் தேசிகன் சொல்லி முடிப்பதற்குள், “சரிங்க நன்றே செய் அத இன்றே செய்யின்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. நான் வச்சிருக்கிற காச தறேன்.  நீங்க நான் எழுதி கொடுக்கிற பொருள வாங்கிட்டு வந்துருங்க போதும். நான் என்னென்ன செய்யலாம்னு பட்டியல் போடறேன்” எனப் பரபரப்பானாள் தவமலர்.

ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவு வகைகளைச் செய்து அசத்தினாள் தவமலர். முதல் வாரத்தில் ஓரிருவர் மட்டுமே வாங்கினாலும், மறு வாரத்திலிருந்து வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஒரு மாதம் கூட நெருங்காத நிலையில் வியாபாரம் சரிவைக் கண்டது. பலரும் இதே பாணியைப் பின்பற்ற ஆரம்பித்ததால் வந்த வினை. யாரைச் சொல்லியும் குற்றமில்லை. அவரவர்க்கு ஆயிரம் தேவைகள்; சங்கடங்கள். தவமலர் செய்த முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீரானது. சமைத்த உணவுகள் மிச்சமாகின; இதனால், இருக்கும் கொஞ்சநஞ்ச காசும் விரையமானது.

“மலர், முடி திருத்த வாடகைக்கு எடுத்த ரெண்டு கடைகளையும் வாடக கட்ட முடியாம விட்டுட்டோம். வீடு, கடை, காடி கடன்களுக்கு வங்கி கொடுத்த ஆறு மாசத் தவணையும் இன்னும் ரெண்டு மாசத்துல முடியப்போது. எனக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல. நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். நம்ம நிலம அதல பாதாளத்துக்குப் போறதுக்குள்ள, நான் பூட் பாண்டா (food panda) ஓட்டப்போறேன்; அதுக்குதான் இப்ப கிராக்கி. ஆனா, முதல்ல பதிவு பண்ணனுமா. நான் அத முயற்சி பண்ணி பாக்குறேன்” என்ற கணவரிடம், “சரி அப்படியே செய்யுங்க. நானும் துணி தைச்சி குடும்ப வருமானத்த கூட்டப் பாக்கிறேன்” என்றாள் தவமலர்.

தேசிகன் மூன்று மாதங்களாக பூட் பாண்டா ஓட்டிக் கிடைத்த வருமானம் குடும்பச் செலவுக்குக்கூட பற்றாமல் அன்றாடங் காட்சியானது. தவமலரின் தையல் வேலையும் எதிர்பார்த்த அளவுக்குக் கைகொடுக்கவில்லை. பலரும் சிரமப்படுவதோடு எங்கும் செல்ல முடியாத இக்காலக் கட்டத்தில் துணி தைத்து அணியும் அவசியம் யாருக்கும் இல்லாமல் இருந்தது. அரசாங்கமும் பல நல்ல உள்ளங்களும் அவ்வப்போது கொடுத்த உணவுப்பொருட்களால் அவர்களுக்கு உணவுத் தேவை கட்டுக்குள் இருந்தது. ஆனால்,  வங்கிக்கடன் அவனது குரல் வளையை நெறித்தது. அதற்காக அவன் அலையாத இடமில்லை. பல அரசியல்வாதிகளையும், பொது அமைப்புகளையும்  நாடினான். எந்தப் பயனுமில்லை; ஏமாற்றமும் அவமானமும் மட்டுமே மிஞ்சியது.

ஓரிரு வாரங்களில் அனைத்துச் சொத்துகளும் தம்மை விட்டுப் போய்விடும் என்ற அச்சத்திலும், தன் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த பீதியிலும் நிலைதடுமாறினான் தேசிகன். எக்காலத்திலும், எச்சூழலிலும் உற்றார் உறவினரிடம் உதவியை நாடிச் செல்லக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தான். இப்படிச் சிக்கித் தவித்ததால்தான் அவன் அப்படிப்பட்ட முடிவை எடுத்தான்.

பிள்ளைகள் அழும் சத்தத்தைக் கேட்டுத் தன் சுய நினைவுக்கு வந்தவள், அழும் குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுத்து விட்டு, அடுத்து என்ன செய்வதென்று அறியாமல் இறைவனை மனதார வேண்டிக் கண்ணீர் வடித்தாள். “மலர், ஏன் சும்மா அழுதுகிட்டு இருக்க. வாழப்போறது இன்னும் எத்தனையோ மணி நேரந்தான். இவ்வளவு நாளா கண்ணீர் வடிச்சது போதும். எத்தனையோ இரவு எப்படிதான் எல்லா பிரச்னையையும் சமாளிக்கப் போறோமோன்னு தூங்காம இருந்தோம். இந்த ஒரு இராத்திரியாவது நிம்மதியா எந்த பிரச்னையும் இல்லாம தூங்குவோம்” என முகத்தில் எந்தச் சலனமுமின்றித் தன் மனைவியை அழைத்தான் தேசிகன்.

பொழுது புலர்ந்தது; கண், முகமெல்லாம் வீங்கியிருந்த தவமலரின் தோற்றத்திலேயே அவள் இரவெல்லாம் தூங்கவில்லை என்பது தெரிந்தது. “ஏங்க நாம எப்படி வாழ்ந்தோம்; பிள்ளைகள எப்படியெல்லாம் வளர்த்து ஆளாக்குவோம்னு கனவு கண்டோம். ஆனா, இப்ப நீங்க எடுக்கிற முடிவ என்னால ஏத்துக்கவே முடியலைங்க. லட்சக்கணக்குல கடனவுடன வாங்கி, கடல் கடந்து இங்கு வந்து வேலை செய்யறவங்கல நினைச்சுப் பாருங்க. அவங்களுக்கு இல்லாத கடனா நமக்கு இருக்கு. அவங்கெல்லாம் எதிர்நீச்சல் போட்டு வாழலையா? காடி நமக்கு எதுக்கு? அது இல்லாதப்ப நாம எங்கையும் போகலையா வரலையா? போனா போகட்டுமே. பிறகு சம்பாரிச்சிக்கலாம்” எனச் சொல்லி முடிப்பதற்குள், ‘பளார்’ என அவள் கன்னத்தில் அறை விழுந்தது.

“ உனக்கு எத்தன தடவ சொன்னாலும் புத்தி வராதா? நீயும் படிச்சிருக்கதான; திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்காரு, ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்’ மானமே போகப் போது, அப்புறம் என்ன வாழ வேண்டியிருக்கு” என ஆவேசமாகப் பேசி முடித்தான் தேசிகன்.

     தவமலர் தன் கண்களில் வழியும் நீரைத் துடைத்து நிதானமாக, “அதே திருவள்ளுவர்தாங்க,

‘ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்’ ன்னு சொன்னாரு” என்றாள். “மலர், பசி வந்தா பத்தும் போகும். நான் முடிவெடுத்திட்டேன்; இனி மாறமாட்டேன். பிள்ளைங்க எழுந்திரிக்கிறதுக்குள்ள நீ முதல்ல போய் பிள்ளைகளுக்கு பால் கலக்கி எடுத்துட்டு வா; அப்படியே நமக்கும் பழைய சோற எடுத்துட்டு சீக்கிரம் வா”. என்றான்.

வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்தை அவற்றில் கலந்தான். அவனது மனைவி எவ்வளவு தடுத்தும் காதில் வாங்காமலும், ஏதோ ஒரு வெறியோடும் இருந்தான். அந்த நொடியில், ‘டிரிங் டிரிங்’ எனத் தவமலரின் கைப்பேசி அலறியது. “உன்கிட்ட அத அடைச்சு போடத்தான சொன்னேன். போய் எடு போ” என விரட்டினான்.

மறுமுனையில் “மலர் என்னை மன்னிச்சிடுமா. இப்பதான் என் கூட்டாளி பதில சொன்னான். நீ முதல்ல உன் புருசனக் கூப்பிடு”. “என் அண்ணங்க, உங்ககிட்ட பேசணும்னு சொல்றாரு”. “நீ ஏதும் சொன்னியா” எனச் சாடை காட்ட, “இல்ல இல்ல” என அவளும் கையசைத்தாள்.

  “சொல்லுங்க மச்சான். ஏன் இந்தக் காலை நேரத்துல என்னிக்கும் இல்லாம?”.எனப் பௌவியமாகக் கேட்டான். “முக்கிய விசயமாதான் மாப்பள. என்னோட கூட்டாளி ஒருத்தன் கேமரன் மலையில இருந்து காய்கறிகள இறக்கி, மலேசியா முழுதும் அனுப்புற வியாபாரம் செய்யறான். அவன்கிட்ட வேல செஞ்ச ஒருத்தன் விபத்துல சிக்கி கால் உடைஞ்சிருச்சான். அவனுக்கு அவசரமா ஒரு டிரைவரு தேவன்னு சொன்னா. சம்பளம் இரண்டாயிரத்து ஐந்நூறு வெள்ளின்னும், ஏதேதோ கமிசன் சேர்த்து கிட்டதட்ட மூவாயிரம் சம்பாரிக்கலாம்னு சொன்னா.  எனக்கு உடனே உங்க ஞாபகம் வந்திருச்சு. நீங்க சரின்னு சொன்னா நான் அவரோட போன் நம்பர அனுப்புறேன். லோரி ஓட்டற லைசென்ஸ் இருக்குதானே” என்றார்.

“வ…வ….வச்சிருக்கேன் மச்சான்”.

                           முற்றும்

எழுதுவது :சி.விஜயலட்சுமி கோவிந்,மலேசியா