பெயர் வைப்பதும் அழைப்பதும் எப்படி இருந்தால் சிறப்பு| அதிர்ஷ்டப்பெயர் அமைப்பது எப்படி?

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியங்கள்…

நமது பாரம்பரிய ஜோதிடத்தின் அடிப்படையில் நாம் நமக்குரிய பலன்களைத் தெரிந்து கொண்டாலும், நம்மில் ஒருசிலரிடம் எண் கணிதத்தின் அடிப்படையில் பெயரை அமைத்துக்கொள்வதால் பலனடைய முடியும் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு மனிதர்களின் வெற்றிக்குப் பின்னாலும் அவர்களுடைய ஆழ்மனதில் தோன்றும் நம்பிக்கையே பிரதானமாக அமைந்துள்ளது.

அந்த வகையில் ஒரு சாராருக்கு எண் கணிதத்தின் மீதான நம்பிக்கையும் இங்கேயுள்ளது.

பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ளது போலவே எண் கணிதத்திலும் ஒன்பது கிரகங்களே மையப்படுத்தப் படுகிறது.

பாரம்பரிய ஜோதிடத்தில் பனிரெண்டு வீடுகளை மையமாக வைத்து அவற்றில் ஒன்பது கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையை வைத்து நம்முடைய பலன்களை நாம் தெரிந்து கொள்கிறோம்.

எண் கணிதத்தில், நாம் நம்முடைய பிறந்த தேதியை மையமாக வைத்து அதை உடல் எண் என்றும், பிறந்த தேதி, மாதம், ஆண்டு என்று மூன்றையும் கூட்டி அதனை ஒற்றைப்படையாக்கி வரும் எண்ணை உயிர் எண் என்றும் எடுத்துக்கொண்டு அதற்கேற்ற பலன்களை தெரிந்து கொள்கிறோம், இதற்கும் மேலாக ஒரு சிலர் பிறந்த மாதத்திற்குரிய எண்ணை விதி எண்ணாகவும் கொண்டு பலன்களைத் தேடுகிறார்கள்.

எண் கணிதம் என்ற இந்த ஜோதிட முறைக்கும் நம்முடைய பாரம்பரிய ஜோதிடத்தின் ஆதாரமான நவகிரகங்களே துணை நிற்கின்றனர்.

நம்முடைய பாரம்பரிய ஜோதிடத்தில், சூரியன், சந்திரன், செவ்வாய் என்று ஒன்பது கிரகங்கள் இருக்கிறதல்லவா அதேபோல் எண் கணிதத்திலும் ஒன்பது கிரகங்களே மையப்படுத்தப்படுகிறது.

எப்படி என்கிறீர்களா? நெ. 1 என்றால் அதன் கிரகமாக சூரியனையும், நெ. 2 என்றால் அதன் கிரகமாக சந்திரனையும், நெ. 3 என்றால் அதன் கிரகமாக குருவையும், நெ. 4 என்றால் அதன் கிரகமாக ராகுவையும், நெ. 5 என்றால் அதன் கிரகமாக புதனையும், நெ. 6 என்றால் அதன் கிரகமாக சுக்கிரனையும், நெ. 7 என்றால் அதன் கிரகமாக கேதுவையும், நெ. 8 என்றால் அதன் கிரகமாக சனியையும், நெ. 9 என்றால் அதன் கிரகமாக செவ்வாயையும் முன்வைத்தே எண் கணித வல்லுநர்கள் பலன் கூறுகின்றனர்.

எண் கணிதத்தின் அடிப்படையும் நவகிரகங்கள்தான் என்பதை இதன்மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

எண். 1 உடல் எண்ணாக உள்ள ஒருவருக்கு எப்படி அவருடைய பலன் கண்டறியப்படுகிறது என்றால், அந்த எண்ணிற்கு அதிபதியான சூரியனுடைய குணங்கள், அவர் வழங்கும் பலன்கள், அவரால் உண்டாகும் தொழில்கள், அவரால் உண்டாகும் சிறப்புகள், அவரால் உண்டாகும் நோய்கள், அவருக்குரிய நண்பர்கள் என்று சூரியனுக்கு பொதுவாக கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் அந்த ஜாதகருக்கு உண்டாகப்போகும் பலன்களாக கூறப்படுகிறது.

இதேபோல்தான் ஒன்பது எண்களுக்கும் எண் கணிதத்தில் பலன்கள் கூறப்படுகிறது.

இந்த நிலையில், எண் கணிதத்தில், ஒருவர் பிறந்த எண்ணான உடல் எண்ணை மையப்படுத்தி பெயரை அமைத்துக்கொள்வது அதிர்ஷ்டமானதாக கூறப்பட்டு அதையே ஒரு சாரார் இன்றளவும் பின்பற்றியும் வருகின்றனர், ஒரு சிலர், நாள் மாதம் ஆண்டு என்று மூன்றையும் கூட்டி அதன் ஒற்றைப்படை எண்ணிலும் தங்கள் பெயரினை அமைத்துக் கொள்கின்றனர்.

இப்படி பெயரை அமைத்துக்கொள்வதை அதிர்ஷ்டமாகவும் நினைக்கின்றனர்.

இந்த இடத்தில், இட்டு நிரப்புதல் என்றொரு பணியையும் நமது எண் கணித வல்லுநர்கள் செய்கின்றனர்.

ஒருவர் 24.11.1958 ல் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவருடைய பெயரானது உடல் எண்ணாகிய 6 லும் இல்லை, உயிர் எண்ணாகிய 4 லும் இல்லை, அவருடைய முன்னெழுத்தை சேர்த்து அவருடைய பெயர் வேறொரு எண்ணில் வருகிறது.

அவருக்கு தன்னுடைய பெயரை அதிர்ஷ்டப் பெயராக மாற்றிக்கொண்டு அதிர்ஷ்டமடைய வேண்டும் என்ற ஆசை வருகிறது, ஒரு எண் கணித நிபுணரிடம் செல்கிறார், கட்டணம் செலுத்தி ஆலோசனை கேட்கிறார்.

அவரும், இருக்கிற ஆங்கில எழுத்துகளையெல்லாம் சேர்த்து சேர்த்து பார்க்கிறார், இரண்டு ஏக்கள் போடுகிறார், K வை G ஆக்குகிறார், அப்போதும் எதிர்ப்பார்த்த எண் வரவில்லை, கடைசியாக பிறந்த ஊரை விசாரிக்கிறார், அதன் முதலெழுத்தை முன்னே வைக்கிறார். ஒரு வழியாக ஜாதகர் எதிர்ப்பார்த்த எண்ணில் பெயரமைந்து விட்டது.

அதிர்ஷ்ட எண்ணில் பெயரமைந்து விட்டது என்ற எண்ணம் அவருக்குள் வந்து விட்டது.

வணிக நிறுவனங்களுக்கும் இதே ரீதியில்தான் பெயரமைக்கப்படுகிறது, இப்படி பெயரமைத்து தருவதற்காக ஆயிரக்கணக்கில் பணம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதற்குள் நாம் ஆழமாக போக விரும்பவில்லை. ஆனால், இந்த இடத்திலேயே இதே எண் கணித வழியாக பெயரமைத்துக் கொடுப்பவர்களுக்குள் இருவேறு கருத்துகள் வெளிப்படுகிறது.

நியூமராலஜி என்ற எண் கணிதம் அதிர்ஷ்டப் பலன்களை வழங்குவதில் பல்வேறு குறைபாடுகள் இருக்கிறது. அதில், ஒருவருடைய பெயருக்கு முன்னும், பின்னும், இடையிலும் பெயருக்குரிய ஒலி அளவிற்கு மாறாக எழுத்துகள் வலிந்து திணிக்கப்படுகிறது, உதாரணமாக முருகன் என்றால் MURUGAN என்றுதான் இருக்க வேண்டும், அதை MURUKAN என்று ஒரு எழுத்தை மாற்றுவதால், அந்தப்பெயரின் ஒலியளவு MURUGAN என்பதிலிருந்து மாறப்போவதில்லை. அதே போல், பெயருக்கு முன் உள்ள தந்தை பெயருக்கு முன்பாக பிறந்த ஊரின் பெயரை சேர்ப்பதாலும் எந்தவொரு மாற்றமும் உண்டாகப் போவதில்லை. காரணம், ஒருவரை அழைக்கும்போது யாரும் அவருடைய முன்னெழுத்தை எல்லாம் சொல்லி அழைப்பதில்லை. பெயரை வைத்து அழைக்கும்போது கூட பெரும்பாலானவர்களை அவர்களுடைய முழுமையான பெயரைச்சொல்லி யாரும் அழைப்பதில்லை.

இதற்கு ஒரு சின்ன உதாரணம், கதிர்வேல் என்ற பெயருடையவரை அழைப்பவர்கள் அவரை கதிர் என்று அழைக்கலாம், விஜயராகவன் என்ற பெயருடையவரை அழைப்பவர்கள் விஜி என்று அழைக்கலாம், ராஜாராம் என்ற பெயருடையவரை ராஜா என்று அழைக்கலாம்.

இப்படி அழைக்கப்படும் பெயர்கள்தான், அழைக்க அழைக்க, நாவில் ஒலிக்க ஒலிக்க உயிர்பெறுகிறது. அந்த ஜாதகரை மற்றவர்கள் எப்படி அழைக்கிறார்களோ அப்படி அழைக்கப்படும் பெயருக்குரிய எண்ணே அவருடைய எண்ணாக உயிர்பெற்று அவருடைய வாழ்க்கையை நடத்திச்செல்ல ஆரம்பிக்கிறது.

ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய என்று ஆலயத்தில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் உச்சரிப்பு எப்படி ஒரு ஆலயத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறதோ அதேபோல் ஒருவரை எல்லோரும் அழைக்கும் அவருடைய பெயரின் உச்சரிப்பே அவரை ஆட்சி செய்ய தொடங்குகிறது.

நியூமராலஜி என்கிற எண் கணிதத்திலிருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டும் நேமாலஜி என்னும் பெயரியல் வல்லுநர்கள் கூறும் இதுபோன்ற எதார்த்தத்தை நாம் ஏற்றே ஆகவேண்டும்.

பெயரியல் வல்லுநர்கள் முன்வைக்கும் வாதம் நியாயமானதாகவும், அதே நேரத்தில் நம்மை நம்பிடவும் வைக்கிறது.

ஒருவருடைய பெயர் எப்படி உச்சரிக்கப்படுகிறதோ அதன் ஒலியின் அளவிற்கேற்பவே அவருடைய வாழ்க்கையின் விதி தீர்மானிக்கப்படுகிறது என்பது இங்கே உண்மையாகியுள்ளது.

மறைந்த நம்முடைய முதல்வர்கள் எப்படி அழைக்கப்பட்டார்கள் என்பதை நாம் நம்முடைய கவனத்தில் கொண்டு வந்தாலே அவர்களுடைய வெற்றிக்கு என்ன காரணம் என்பது நமக்குத் தெரிய வரும். எம்.ஜி.ஆர். என்ற உச்சரிப்பின் வலிமையே அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது, கலைஞர் என்ற உச்சரிப்பின் தொடர்ச்சியே அவரை முதன்மைப்படுத்தியது, ஜெ என்ற ஒற்றை எழுத்தே அவரை ஜெகமாள வைத்தது.

இப்படி, நாம் அழைக்கப்படும் சுருக்கப்பெயரின் ஒலிப்பிற்குரிய எண்ணே நம் வாழ்வின் விதியாகிறது என்பதை நம்முடைய அனுபவங்களின் வழியாகவும் நாம் ஏற்றே ஆகவேண்டும்.

இந்த இடத்தில் நாம் கவனித்தே ஆகவேண்டும் என்றொரு தகவல் உள்ளது. அது என்ன தெரியுமா?

நியூமராலஜி என்ற கணிப்பின்படி அமைத்துக்கொள்ளும் பெயராகட்டும், நேமாலஜி என்ற முறையில் நாம் அழைக்கப்படும் பெயராகட்டும் இவை இரண்டுமே ஒன்பதிற்குள் உள்ள ஒரு எண்ணில்தான் அமைகிறது, அந்த எண் என்னவென்றால், ஒன்றாக இருந்தால் சூரியன், இரண்டாக இருந்தால் சந்திரன், மூன்றாக இருந்தால் குரு, நான்காக இருந்தால் ராகு, ஐந்தாக இருந்தால் புதன், ஆறாக இருந்தால் சுக்கிரன், ஏழாக இருந்தால் கேது, எட்டாக இருந்தால் சனி, ஒன்பதாக இருந்தால் செவ்வாய் என்று ஒன்பது கிரகங்களை வைத்தே நியூமராலஜி நிபுணர்களும் பெயரமைத்து தருகின்றனர், நேமாலஜி வல்லுநர்களும் பெயரமைத்து தருகின்றனர்.

இவற்றை நாம் கவனத்தில் கொள்ளும்போது நம்முடைய பாரம்பரிய ஜோதிடமே அனைத்திற்கும் மூலமானது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த இடத்தில் நம்முடைய பாரம்பரிய ஜோதிடத்திற்குள் வருவோம், நாம் பிறக்கும்போது வான சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒன்பது கிரகங்களின் நிலையை வைத்து, நம்முடைய ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சியாக, உச்சமாக, நட்பாக இருக்கிறது என்பதையும், எந்தெந்த கிரகங்கள் பகையாக, வக்கிரமாக, நீச்சமாக இருக்கிறது என்பதையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு ஜாதகருக்கு சூரியன் பகையாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அவர் முதல் தேதியில் பிறந்திருக்கிறார் என்பதற்காக அவருக்கு சூரியனுடைய ஆதிக்கத்தில் பெயரமைத்துக் கொடுத்தால் அவருக்கு எப்படி அவருடைய வாழ்க்கையில் நன்மை உண்டாகும்.

நாட்டில் ஆயிரமாயிரம் ஆலயங்கள் இருந்தாலும் ஒருசில ஆலயங்கள்தானே புகழின் உச்சியில் இருக்கிறது. அதேபோல், ஒருவருடைய ஜாதகத்தில் பகையாக உள்ள கிரகத்தின் ஆதிக்க எண்ணில், அந்த எண் உடல் எண் என்றோ, உயிர் எண் என்றோ பெயரை அமைத்துக்கொண்டால் அந்த ஜாதகரின் நிலை எப்போதும் போராட்டமாகவே அமைந்துவிடும், அதிர்ஷ்டம் என்பதே அவருடைய வாழ்க்கையில் இல்லாமல் போய்விடும்.

நம்மில் ஒரு சாராருக்கு இயல்பாகவே அவர்களுடைய பெயர்கள் யோகமானதாக அமைந்துவிடுகிறது, ஒரு சாராருக்கு பாதகமாகவும் அமைந்து விடுகிறது.

இந்த நிலையில், அதிர்ஷ்டப்பெயரை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களும், தாங்கள் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டப்பெயரை அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் முதலில் தங்களுடைய ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் வலிமையானவையாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், அதற்கடுத்து உடல் மற்றும் உயிர் எண்களுக்குரிய கிரகங்களின் நிலைமைகளை ஆராய வேண்டும். இவற்றில் உடல் எண்ணுக்குரிய கிரகம் நம் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அந்த எண்ணின் ஆதிக்கத்தில், நம்மை அழைக்கும்படியான பெயரை அமைத்துக்கொள்ள வேண்டும், நமது நிறுவனத்தை அழைக்கும்படியான பெயரை அமைத்துக்கொள்ள வேண்டும், உடல் எண்ணுக்குரிய கிரகம் ஜாதகத்தில் வலிமை குன்றியிருந்தால் உயிர் எண்ணுக்குரிய கிரகம் நம்முடைய ஜாதகத்தில் வலிமையானதாக இருக்கிறதா என்று பார்த்து அந்த எண்ணின் ஆதிக்கத்தில் நம்மை அழைக்கும்படியான பெயரை, நமது நிறுவனத்தை அழைக்கும்படியான பெயரை அமைத்துக்கொள்ள வேண்டும்.

உடல் எண், உயிர் எண் என்று இரண்டு எண்ணுக்குரிய கிரகங்களுமே ஜாதகத்தில் வலிமை குன்றி, பகையாக, வக்கிரமாக, நீச்சமாக இருந்து விட்டால் ஜாதகத்தில் எந்த கிரகம் நமக்கு வலிமையாக உள்ளது என்பதைத் தெரிந்து அந்த கிரகத்தின் ஆதிக்க எண் வரும்படி, நம்மை அழைக்கும் நிலையில், நமது நிறுவனத்தை அழைக்கும் நிலையில் நம்முடைய பெயரை அமைத்துக்கொள்ள வேண்டும்.

நியூமராலஜி என்கிற எண்கணிதமாகட்டும், நேமாலஜி என்கிற பெயரியல் ஆகட்டும் இரண்டிற்குமே ஆதாரமாகத் திகழ்பவர்கள் நவநாயகர்களான ஒன்பது கிரக சக்திகள்தான்.

நம்முடைய அதிர்ஷ்டப் பெயரை நாம் தேர்வு செய்யும்போது, நம்முடைய உடல் எண், உயிர் எண் என்று பார்த்து அதைவைத்து நம் பெயரை முடிவு செய்வதற்கு முன்பாக, நம்முடைய ஜாதகத்தில் அந்த எண்களுக்குரிய கிரகங்களின் நிலைகளையும் நன்றாக ஆராய்ந்து அதன்பிறகே நாம் ஒரு முடிவிற்கு வரவேண்டும். நம்மை அழைக்கப்படும் பெயரை நம்முடைய ஜாதகத்தில் வலிமையாக உள்ள கிரகத்தின் ஆதிக்கத்திலேயே அமைத்துக் கொள்வது மட்டுமே நமக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.

எழுதுவது : சோதிடவித்தகர் பரணிதரன்