உலகப் பெரும் தனவந்தருக்காக ரொட்டடாம் நகரின் சரித்திரப் பிரசித்தி பெற்ற பாலம் சிதைக்கப்படவிருக்கிறது.

நெதர்லாந்தின் ரொட்டர்டாம் நகரின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருந்து வருகிறது 1878 இல் நிறுவப்பட்ட  De Hef Bridge பாலம். தற்போது பாவனையிலில்லாத அந்தப் பாலத்தை இடிப்பதில்லையென்று முடிவு செய்யப்பட்டிருந்தது. அமெஸான் நிறுவனர் ஜெப் பெஸோஸின் உல்லாசக் கப்பல் அந்தப் பாலம் இருக்கும் கால்வாய் வழியாக வெளியேறுவதற்காக அதை இடிக்கப்போவதாக நகரசபை முடிவெடுத்திருக்கிறது.

டச் நிறுவனமொன்றிடம் தனக்காக மூன்று பாய்மரங்களைக் கொண்ட ஒரு உல்லாசக் கப்பலைக் கட்ட பெஸோஸ் கேட்டுக்கொண்டிருந்தார். கட்டப்பட்டு வெளியேறக் காத்திருக்கும் அதன் உயரம் அதை அந்தப் பாலத்தின் கீழாகப் போகத் தடையாக இருக்கிறது. 430 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் பெறுமதியான அந்தக் கப்பல் 127 மீற்றர் நீளமானது. அதுவே உலகின் மிகவும் அதிக பெறுமதியான உல்லாசக் கப்பலாக இருக்கும்.

பாலத்தை இடிப்பதற்கான செலவைத் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டு பெஸோஸ் அதை நிர்வகிப்பவர்களை அணுக அவர்களும் அதற்குச் சம்மதித்திருக்கிறார்கள். மற்றப் பாலங்கள் போல்  De Hef Bridge பாலம் அவ்வழியே வரும் உயரமான கப்பல்களுக்காக இரண்டாகப் பிரிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தால் ஆனதல்ல. 

இரண்டாம் உலகப் போரில் பெருமளவு பாதிக்கப்பட்ட அந்தப் பாலம் போருக்குப் பின்னர் உடனடியாகச் சீரமைக்கப்பட்டது. 1993 இல் அதன் மீதான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனாலும், ரொட்டடாம் நகரத்தினரின் பெரும் எதிர்ப்பால் அதை அழிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. நகரின் அடையாளங்களில் ஒன்றாகப் பெருமையுடன் விளங்கும் அப்பாலம் 2017 இல் புனருத்தாரணம் செய்யப்பட்டபோது நகரசபை அதை உடைப்பதில்லை என்று மீண்டும் முடிவெடுத்திருந்தது.

நகர மக்களின் எதிர்ப்புக்களால்  பாலத்தை முழுவதுமாக அழிப்பதில்லை என்று யோசிக்கப்படுகிறது. வரும் கோடை காலத்தின் அப்பாலத்தின் நடுப் பகுதியைக் கழற்றி அதை மீண்டும் புனருத்தாரணம் செய்வதென்று திட்டமிடப்பட்டிருப்பதாக அதன் நிர்வாகி வெஸ்ஸல்லிங்க் குறிப்பிட்டிருக்கிறார். அதைச் செய்ய ஒரு வாரம் போதுமென்றும் மேலுமொரு வாரத்தில் மீண்டும் அதைப் பொருத்திவிடலாமென்றும் கணிக்கப்படுகிறது. பெஸோஸ் அந்தத் திட்டத்தை நிறைவேற்றத் தேவையான செலவைக் கொடுப்பாரென்று தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்