நெதர்லாந்தில் கொரோனாக்கட்டுப்பாடுகளுக்கு எதிராகக் கலவரம் செய்தவர்கள் மீது பொலீஸ் துப்பாக்கிப்பிரயோகம்.

வேகமாகப் பரவிவரும் கொரோனாத்தொற்றுக்களைக் கட்டுக்குள் கொண்டுவர நெதர்லாந்தில் சமீபத்தில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை எதிர்த்து நேற்றுப் போராட்டங்கள் நடந்தன. ரொட்டலாமில் அப்படியான நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கல் மீது பொலீசார் துப்பாக்கியால் சுட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் அமைதியாகக் கோஷங்களை எழுப்பிய கொரோனாக்கட்டுப்பாட்டு எதிர்ப்பாளர்களில் ஒரு பகுதியினர் கலவரங்களில் ஈடுபட்டுச் சேதங்களை ஏற்படுத்தியதாகப் பொலீசார் குறிப்பிடுகிறார்கள். எனவே, எச்சரிக்கையாகச் சுட்டதில் பலனில்லாமல் போகவே தாம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

பொலீசார் உட்பட ஏழு பேர் ரொட்டடாமில் இதனால் காயமடைந்திருக்கிறார்கள். பத்துப் பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். 

முதலாவது ஐரோப்பிய நாடாக நெதர்லாந்தே கடந்த வாரம் தனது சமூகத்தில் சில முடக்கங்களை அறிமுகப்படுத்தியது. அது மேலும் இரண்டு வாரங்களுக்குத் தொடரும். தடுப்பூசி போடாதோரை உணவகங்கள், தவறணைகளுக்குள் நுழையாமல் தடை போடலாமா என்று அரசு சிந்தித்து வருகிறது.

விபத்துக்கள் ஏற்பட்டு மருத்துவமனையை நாடுபவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக வரவிருக்கும் புதுவருடத்தில் வாணவேடிக்கைகள் செய்வதை நெதர்லாந்தின் நகரங்கள் நிறுத்திவிட்டதாக அறிவித்தன. அத்துடன் பட்டாசுப் பொருட்களின் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.

சாள்ஸ் ஜெ. போமன்