பிரயாணிகளுடன் மூன்று பேருந்துகள் ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.

இந்தியாவின் வெவ்வேறு பாகங்களை சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக வாட்டி வருகிறது மழையும் வெள்ளமும். தற்போது மழையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுவரும் ஆந்திரப் பிரதேசத்தில் இதுவரை சுமார் 30 பேர் அதன் காரணமாக இறந்தோ காணாமலோ போயிருப்பதாகத் தெரியவருகிறது.

வெள்ளிக்கிழமையன்று பிரயாணிகளை ஏற்றிச்சென்ற மூன்று பேருந்துகளை வெள்ளம் அடித்துச் சென்றது. அவ்விடத்துக்குச் சென்ற மீட்புப் படையினர் 12 இறந்த உடல்களை வெளியே எடுத்தது. மேலும் 18 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அவற்றைத் தவிர மாநிலத்தின் வெவ்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து இறந்தவர்கள், இடிபாடுகளிடையே மாட்டிக்கொண்டிருப்பவர்கள் என்று இறப்பு எண்ணிக்கை 100 ஐ  நெருங்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

எதிர்பாராதவிதமான பாதகங்களை விளைவிக்கும் காலநிலை ஆசியாவின் தென்பகுதியைத் தாக்கி வருகிறது. அளவுக்கதிகமான நகரப்படுத்துதல், காடுகளை அழித்தல் மற்றும் அணைக்கட்டுகள் ஆகியவையே மக்களைத் தாக்கி அவர்களின் சொத்துக்களுக்குச் சேதத்தை விளைவிக்கக் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்