வாடிக்கையாளரை வாசலில் வைத்து பொலீஸார் போல் சோதிக்க முடியாது! உணவக உரிமையாளர்கள் அதிருப்தி.

சுகாதாரப் பாஸின் கியூஆர் குறியீட்டைஸ்கான் செய்வது மட்டுமே உணவகங்களது பொறுப்பாக இருக்கவேண்டும். பொலீஸாரைப் போன்று கேள்வி கேட்டு ஆளடையாளங்களை சோதனை செய்ய முடியாது. அது உணவகப் பணியாளர்களின் வேலையும் அல்ல.

இவ்வாறு உணவக ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவம்செய்யும் சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸில் கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. உணவகங்கள், அருந்தகங்கள், வணிகநிலையங்களுக்கு அது எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதனைப் பின்பற்றாத நிலையங்களது உரிமையாளர்கள் சிறை மற்றும் அபராதங்களைச் சந்திக்கநேரிடும்.

வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்கு முன்பாக அவர்களிடம் சுகாதாரப் பாஸ் இருக்கிறதா என்பதை வாசலில் வைத்துப் பரிசோதிப்பது கட்டாயம் ஆகும். உணவகங்கள் போன்ற நிறுவனங்களின் வாயில்களில் இதற்காகஒருவர் பணியில் ஈடுபட வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது.

வாடிக்கையாளர்களது சுகாதாரப் பாஸ்களில் உள்ள “கியூஆர் கோட்” (QR Code) குறியீட்டை ஸ்கான் செய்வது மட்டுமே தங்களது பணி என்றும் அதற்கு மேலதிகமாக வாடிக்கையாளரதுஆளடையாளங்கள் சரியா, அது போலியான ஆவணமா என்பதையெல்லாம்பொலீஸாரைப் போன்று பரிசோதித்துக் கொண்டிருக்கமுடியாது. அது உணவகங் களது பொறுப்பு அல்ல – என்று உணவக சம்மேளனங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.

சுகாதாரப் பாஸ் பரிசோதனை என்பதுஅதை வைத்திருப்பவர்களது ஆளடையாளங்களைப் பரிசோதிப்பது (vérification de l’identité”) அல்ல என்று TF1 தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்த சமயம் பிரதமர் ஜீன் காஸ்ரோ தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக உணவகங்கள், வணிகநிறுவனங்களுக்கு உரிய விளக்கங்கள்பின்னர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.சுகாதாரப் பாஸ், கட்டாயத் தடுப்பூசி ஆகியனவற்றை உள்ளடக்கிய சட்ட மூலம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் மிகவும் சூடாக நடைபெற்றுவருகிறது. எதிர்க்கட்சிகளது காரசாரமான கேள்விகளுக்குஅரசு பதிலளிக்கின்ற நிலை காணப்படுகிறது. உணவகங்கள் போன்றவற்றின் நடைமுறைச் சிக்கல்களையும் எம். பிக்கள் அங்கு எழுப்பியுள்ளனர்.

உத்தேச சட்ட மூலம் ஆயிரத்துக்கு மேற்பட்ட திருத்தங்களை எதிர்நோக்கியிருப்பதால் அதன் மீதான விவாதங்கள் நீண்டுசெல்கின்றன. விவாதித்து முடிக்கும் வரை வைரஸ் காத்திருக்கப் போவ தில்லை என்று அரசுத் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.———————————-

குமாரதாஸன். 22-06-2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *