கொரோனாக் கட்டுப்பாடுகளுக்கெதிராக நியூசிலாந்தில் தண்டிக்கப்பட்டவர்களில் மாவோரிகள் அதிகமானோர்.

கொரோனாத் தொற்றுக்களைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட கண்டிப்பான சட்டங்களை மீறுவோரைக் கடுமையாகத் தண்டிக்கும் நாடுகளிலொன்று நியூசிலாந்து. அக்குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தித் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் நாட்டின் பழங்குடிகளான மாவோரியர்களின் எண்ணிக்கை கண்களை உறுத்துவது தவிர்க்க முடியாதது. 

நியூசிலாந்தின் கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறியதாக இதுவரை சுமார் 7,600 பேர் பதியப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 450  பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சட்டப்படி இந்தக் கட்டுப்பாடுகளைத் தெரிந்துகொண்டே மீறுபவர்களை 6 மாதச் சிறைத்தண்டனை வரை தண்டிக்கலாம். 85 பேருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தண்டிக்கப்பட்டோரெல்லோரும் ஆண்களே.

குற்றஞ்சாட்டப்பட்டோரிலும், தண்டிக்கப்பட்டிருப்போரிலும் பெரும்பான்மையானவர்கள் நாட்டின் சிறுபான்மையினரான மாவோரியர்களாக இருப்பது நாட்டின் இனவாதப் பிரச்சினையை மீண்டும் வெளிச்சப்படுத்திக் காட்டுகிறது. அவர்கள் நாட்டின் 16 % மட்டுமே. நீண்டகாலமாகவே நாட்டின் நீதித்துறையும், பொலீசாரும் இனவாதக் கண்ணோட்டத்துடன் நடப்பது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதைத் தவிர நாட்டின் முன்னாள் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் டேவிட் கிளார்க் இச்சட்டங்களுக்கு எதிராக ஒன்றல்ல, இரண்டு தடவைகள் நடந்தமை கண்டுபிடிக்கப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முதல் தடவை அவர் வீட்டுக்குள்ளிருக்கும் கட்டுப்பாடுகளைப் போட்டுவிட்டு மிதிவண்டியில் போனது தெரியவந்தது. மீண்டும் அவர் வீட்டடங்கை மீறிக் குடும்பத்தினருடன் கடலில் நீந்தச் சென்றிருந்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *