மின்சாரத்திலான தானே இயங்கும் முதலாவது சரக்குக்கப்பலை நோர்வே நிறுவனமொன்று பாவனைக்குக் கொண்டுவருகிறது.

நோர்வேயின் உரம் தயாரிக்கும் நிறுவனமான யாரா தனது தொழிற்சாலைக்கும் ஏற்றுமதித் துறைமுகத்துக்கும் இடையிலான போக்குவரத்தை இதுவரை பாரவண்டிகள் மூலம் செய்து வந்தது. அதை மாற்றி, முழுக்க முழுக்க மின்சாரத்தால், தானே இயங்கும் கப்பல் மூலம் இனிமேல் தனது தயாரிப்புக்களைத் துறைமுகத்துக்குக் கொண்டுசெல்லவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

யாரா பிர்க்கலாண்ட் என்ற அந்த 80 மீற்றர் நீளமான சரக்குக் கப்பல் போஸ்ட்குருன் என்ற நகரிலிருந்து பிரேவிக் நகருக்குச் சரக்குகளுடன் பயணிக்கும். அடுத்த வருடத்திலிருந்து இயங்கப்போகும் இக்கப்பல் 1,000 தொன் கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைக்கும் என்று கணிக்கப்படுகிறது. 

கப்பலில் தேவையான சரக்கைத் தானே ஏற்றிக்கொண்டு தானே கொண்டு சென்று தானே துறைமுகத்தில் ஏற்றிவிடப்போகும் இக்கப்பல் வார்ட் நோர்வே என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. தனது செயற்பாட்டில் மனிதர்களின் தேவையை இக்கப்பல் எதிர்பார்க்காது. ஆரம்பத்தில் வாரத்தில் இரண்டு தடவைகள் இந்தக் கப்பலின் சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும்.

சாள்ஸ் ஜெ. போமன்