நிறுவனத்தின் நிலைமையறிந்ததும், நியூயோர்க் பங்குச்சந்தையில் மெத்தா பங்குகளின் பெறுமதி வீழ்ச்சியடைந்தன.
பதினெட்டு வருடங்களாக விண் பூட்டிப் பறந்துகொண்டிருந்த பேஸ்புக் என்ற பட்டம் தனது கவர்ச்சியை இழந்துவருவதாகப் பல கணிப்புகள் காட்டுகின்றன. மட்டுமன்றி வர்த்தக உலகம் எதிர்பார்த்த இலாபத்தையும் காட்டாமல், மேலும் வளரும் என்றும் நம்பவைக்க முடியாத மெத்தா நிறுவனத்தின் நேற்றைய காலாண்டுக் கணக்குவழக்குகளை அறிந்ததும் அதன் பங்குகளின் பெறுமதி நியூயோர்க் பங்குச்சந்தையில் சுமார் 20 விகிதத்தால் வீழ்ச்சியடைந்தன. மெத்தா நிறுவனத்தின் கொழுத்த மாடு பேஸ்புக் என்பது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கால் இளவயதினரைத் தொடர்ந்தும் கவர முடியவில்லை என்று கடந்த காலண்டுக் கணக்குவழக்குகள் வெளியானதுமே தெரியவந்தது. வட அமெரிக்காவில் அந்தத் தளம் சுமார் ஒரு மில்லியன் பாவனையாளர்களை இழந்திருந்தது. இவ்வருடத்தின் முதல் காலாண்டிலும் அதுவே தொடர்கிறது. சுமார் அரை மில்லியன் பாவனையாளர்கள் குறைந்திருக்கிறார்கள். பேஸ்புக் மட்டுமன்றி இன்ஸ்டகிராம், வட்ஸப் ஆகியவற்றிலும் பாவனையாளர்கள் குறைந்து வரும் போக்கு தெளிவாகியிருக்கிறது.
18 ஆண்டு காலமாகிவிட்டது பேஸ்புக் அறிமுகப்படுத்தப்பட்டு. அச்சமயத்தில் பதின்ம வயதாக இருந்தவர்களைக் கவர்ந்தே அந்தத் தளம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்தது. அச்சமயத்தில் அதில் தொற்றியவர்கள் இப்போது வயது வந்தவர்களாகிவிட்டார்கள். பொதுவாகவே தமது பெற்றோர், அவர்களின் பெற்றோர்கள் விரும்பும் விடயங்களைத் தவிர்ப்பது இளவட்டங்களின் வழக்கம். வாழ்க்கை நிலையும் மாறியுள்ள நிலையில் 2004 ம் ஆண்டளவில் பிறந்தவர்களுக்கு பேஸ்புக்கின் அவசியமில்லை என்ற நிலைமை ஏற்பட்டிருப்பதாக வர்த்தக நிறுவன அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.
புதிய பாவனையாளர்களை, முக்கியமாகப் பதின்ம வயதினரைக் குறிவைத்தே கடந்த வருட இறுதியில் பேஸ்புக் தனது பெயரை மெத்தா என்று மாற்றி ஒரு புதிய உலகத்தையே உருவாக்குவதாகக் குறிப்பிட்டது. ஆனால், அந்த வகையில் மெத்தா நிறுவனம் இதுவரை திருப்திகரமாக எதையும் செய்யவில்லை.
மனிதர்களின் எதிர்மறையான உணர்வுகளைத் தூண்டி அழிவுகரமான பாதையில் பேஸ்புக் இழுத்துச் செல்வதுடன் கருத்துப் பிரிவினைகளை உண்டாக்கி அதன் மூலம் பொருளீட்டியும் வருவதாக அந்த நிறுவனம் மீது சர்வதேச ரீதியில் விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதை நிரூபிக்கும் ஆவணங்களை அந்த நிறுவனத்தை விட்டு விலகிய முக்கிய புள்ளிகளே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அரசியல், வர்த்தக ரீதியில் பேஸ்புக்கின் பேராதிக்கத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி ஐரோப்பிய, அமெரிக்க ஆட்சியாளர்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.
இந்த நிலைமையில் மெத்தா நிறுவனத்தில் முதலீடு செய்வது ஆபத்து என்று நிறுவன ஆராய்வாளர்கள் எச்சரித்து வருகிறார்கள். பல வாய்க்கால்களைக் கொண்ட மெத்தா நிறுவனம் புதியதாக எதையும் உண்டாக்கித் தனது பாவனையாளர்களைத் தம்மிடம் வைத்திருப்பதோ, பதின்ம வயதினரைத் தன்னிடம் இழுப்பதோ நம்பமுடியாத விடயம் என்றும் பரவலாகக் கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்