பங்குச்சந்தையில் வீழ்ந்துகொண்டேயிருக்கும் நிறுவனங்களிலொன்றாக மாறி இருக்கிறது பேஸ்புக்கின் மெத்தா!

சுமார் ஒரு வருடமாகியிருக்கிறது மார்க் சுக்கன்பெர்க் நிறுவி உலகைக் காட்டுத்தீ போல ஆக்கிரமித்த பேஸ்புக்கின் பெயர் மெத்தா என்று மாற்றப்பட்டு. அதன் பின்னர் அந்த நிறுவனத்தின் நிர்வாகம், இயக்கங்கள் எதுவுமே ஒழுங்காக இல்லை என்று பல வர்த்தக ஆலோசகர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். அதே சமயம் மெத்தா தனது பெறுமதியைப் படிப்படியாகப் பங்குச் சந்தையில் இழந்து வருகிறது.

S&P 500 பங்குச்சந்தை நிறுவனங்களில் இவ்வருடத்தில் தலைகுப்புற விழுந்துகொண்டிருக்கும் பங்குகளில் மெத்தா முக்கியமானது. நாலே நான்கு நிறுவனங்களே அதைவிட மோசமாக வீழ்ச்சியடைந்திருக்கின்றன. 2019 ம் ஆண்டின் ஆரம்பத்தில் பேஸ்புக் பங்குகள் விற்கப்பட்ட விலையளவுக்கு மீண்டும் தாழ்ந்திருக்கின்றன.

ஒரு பக்கத்தில் மார்க் தனது ஆசைக்குழந்தை பேஸ்புக்கை மதமாற்றம் செய்து மெத்தா விசுவாசியாக்க முய்ற்சிசெய்து வருகிறார். செப்டெம்பர்  2021 இல் தனது அதியுச்ச விலையில் விற்கப்பட்ட பேஸ்புக் பங்குகளை வீசிவிட்டு ஓடுகின்றன முதலீட்டு நிறுவனங்கள். அதனால் பேஸ்புக்கில் விளம்பரங்கள் செய்வதையும் தவிர்த்துக்கொள்கின்றன சர்வதேச நிறுவனங்கள். அந்தச் சுழிக்குள்  கீழ் நோக்கி இழுக்கப்படுகிறது மெத்தா. 

அதியுச்சப் பெறுமதியிலிருந்ததை விட மூன்றிலிரண்டு பகுதியை இழந்திருக்கிறது பேஸ்புக். இரண்டு காலாண்டுகளாகக் கணிசமான இழப்பாலும் அடிபட்டிருக்கிறது. 

“மெத்தா சுமார் ஒரு பில்லியன் வாடிக்கையாளர்களை எட்டும். டிஜிடல் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல பில்லியன் பெறுமதியான பொருட்கள், சேவைகள் பண்டமாற்றம் செய்யப்படும் மையமாக மாறும்,” என்கிறார் மார்க் சுக்கன்பெர்க் தனது நிறுவனத்தின் குறி என்னவென்பதை ஒரு பேட்டியில். ஆனால், வர்த்தக நிறுவனங்களை அலசுபவர்களோ அவரது தலைமையின் இயக்கத்தைப் படு மோசமானது என்று விமர்சிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *