“மணல் தட்டுப்பாடு என்பது விரைவில் உலகம் எதிர்நோக்கவிருக்கும் பிரச்சினை,” எச்சரிக்கிறது ஐ.நா அமைப்பு.

நீர்ப் பாவனைக்கு அடுத்ததாக உலகில் பாவிக்கப்படும் இயற்கை வளம் மணலாகும். மணலை எவ்வளவு, எவரெவர் பாவிக்கலாம் என்ற கட்டுப்பாடு ஏதுமின்றியிருக்கிறது. அந்த வளத்தை மனிதர்கள் பாவித்து வரும் வேகம் விரைவில் அது தட்டுப்பாட்டுக்கு உள்ளாக்குவதாக இருக்கும் என்று எச்சரித்திருக்கிறது ஐ.நா- சூழல் கண்கானிப்பு அமைப்பு (UNEP). மணல் இயற்கையான முறையில் உண்டாகுவதற்காகப் பல நூற்றாண்டுகள் செல்கிறது என்பதை அது சுட்டிக்காட்டியிருக்கிறது.

“மணல் என்ற இயற்கை வளத்தைப் பாவிப்பதற்கான கட்டுப்பாடுகளை நாம் வேகமாக அறிமுகப்படுத்தாவிட்டால் உலக சமூகத்தின் மணல் தேவை பற்றிய எதிர்பார்ப்பை எதிகொள்ளுமளவுக்கு அது கிடைக்காது. நாம் உடனே நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அப்படியான ஒரு நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்கலாம்,“ என்று (UNEP) அமைப்பின் பொருளாதாரத் திட்டமிடல் அதிகாரி ஷீலா அகர்வால்-கான் குறிப்பிட்டிருக்கிறார்.  

கட்டுமானத் தயாரிப்புக்கள், கண்ணாடி ஆகியவைக்கான தேவை கடந்த 20 வருடங்களில் உலகளவில் மூன்று மடங்காக அதிகரித்திருக்கின்றன. சராசரியாகக் கணக்கிட்டால் அத்தேவை தினசரி தலைக்கு 14 கிலோ என்ற அளவிலிருக்கிறது. அதன் விளைவால் கடற்கரைகள், ஆறுகளின் பக்கங்கள், சிறிய தீவுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. 

பல மனிதத் தேவைகளுக்குப் பயன்படுவதைத் தவிர, சுற்றுப்புற சூழலைப் பேணிப் பாதுகாப்பதில் மணல் முக்கிய இடத்தை வகிக்கிறது. அந்தச் சூழலில் மட்டும் தங்கியிருக்கும் உயிரினங்கள், தாவரங்களைப் பாதுகாப்பதுடன் அது கடலலைகளின் வேகம், வெள்ளம், சூறாவளி போன்றவைகளிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது.  

தென்கிழக்காசிய நாடுகளில் பலவும் மணல் குறைந்து வருவதால் பாதிக்கப்பட்டிருக்கின்றன, சீனா, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், மியான்மார் ஆகிய நாடுகளின் விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் காலநிலை போன்றவைக்கு அதி முக்கியமான நதி மெக்கூங். அந்த நதிக் கரையோரங்களில் கட்டுப்பாடின்றி மணலை அகற்றுவதால் அதன் ஆழம் பல இடங்களில் அதிகரித்திருக்கிறது. விளைவாக, விவசாய நிலங்கள் பலவற்றில் உப்பு நீர் நுழைந்து பாவிக்க முடியாமல் செய்திருக்கிறது.

சிறீலங்காவில் ஓடும் ஆறொன்றின் நீரோட்டத் திசையே அதன் கரைகளில் மணல் அகற்றப்பட்டிருப்பதால் மாறியிருக்கிறது. விளைவாக ஆறு கடலில் சேர்வதற்குப் பதிலாகக் கடல்நீர் ஆற்றின் வழியே உள்ளே வந்து அதன் அடிப்பையையே மாற்றியிருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *