ஒபெக் + அமைப்பு, தமது பெற்றோல் தயாரிப்பைக் குறைக்கத் திட்டமிடுவது, ரஷ்யாவுக்கு ஆதரவானதே என்று குற்றஞ்சாட்டுகிறது அமெரிக்கா.

உக்ரேன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்யாவைத் தண்டிப்பதற்காகப் புதிய பொருளாதார முடக்கங்களை அறிமுகப்படுத்தியதற்கு அடுத்த நாளே எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஒபெக் + ஆஸ்திரியாவின் வியன்னாவில் சந்தித்தது. 13 அங்கத்தவர்களையும் 10 கூட்டுறவு நாடுகளையும் கொண்ட அந்த அமைப்பினர் தாம் தயாரிக்கும் பெற்றோலின் அளவை நவம்பர் மாதத்திலிருந்து,  தினசரி 2 மில்லியன் பீப்பாய்களால் குறைக்கப்போவதாக அறிவித்தனர். 

ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் பெற்றோல் விலை அதிகரித்திருக்கும் இச்சமயத்தில் அதன் பாதிப்பு உலகப் பொருளாதாரத்தையும் பாதித்து வருகிறது. போரினால் உலக நாடுகளின் பொருளாதாரம் படிப்படியாகப் பலவீனமடைந்து வரும்போது ஒபெக் + எண்ணெய்த் தயாரிப்பைக் குறைத்து அதன் விலையை உயர்த்துவதனால் தொழில்துறையானது பல நாடுகளிலும் மேலும் பாதிக்கப்படும். அது உலகின் பலவீனமான நாடுகளின் பொருளாதாரத்தை மேலும் இறங்கு நிலைக்கே கொண்டுசெல்லும் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.

பெற்றோலியப் பொருட்களின் விலையுயர்வால் ஒபெக் + அமைப்பின் அதி பலமான நாடான ரஷ்யாவின் வருமானம் அதிகரிக்கும். ரஷ்யா நடத்திவரும் போரைத் தண்டிக்க மேற்கு நாடுகள் போட்டிருக்கும் பொருளாதார முட்டுக்கட்டைகளை ரஷ்யா எதிர்கொள்ள அது வாய்ப்பைக் கொடுக்கும். எனவே, அந்த அமைப்பின் நகர்வுக்கான காரணம் ரஷ்யாவுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதே என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.

பெற்றோலியத் தயாரிப்பை அதிகரிக்கும்படி, ஒபெக் + அமைப்பின் இன்னொரு பலமான நாடான சவூதி அரேபியாவை அமெரிக்கா சமீப காலத்தில் வேண்டி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதியின் ரஷ்யப் பயணமும் அதற்கான ஒரு காரணமே. அப்படியிருந்தும் சவூதிய அரசு அதை அசட்டை செய்திருப்பது அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நடவடிக்கை ஒரு பொருளாதாரப் போருக்கான அறைகூவலே என்றும் அமெரிக்காவின் அறிக்கை குறிப்பிடுகிறது.

‘நாம் தனியாக எடுத்த நடவடிக்கையல்ல இது. அமைப்பிலிருக்கும் பெரும்பாலான நாடுகளின் விருப்பமே இந்த முடிவு’ என்று ஒபெக் + சார்பில் குறிப்பிடப்படுகிறது. சவூதிய எண்ணெய் வள அமைச்சரும் தமது முடிவுக்குக் காரணம் அமெரிக்காவுடனோ, மேற்கு உலகுடனோ பகைத்துக்கொள்வதல்ல என்று குறிப்பிடுகிறார். தாம் ரஷ்யாவை ஆதரிப்பதற்காக இம்முடிவை எடுக்கவில்லை என்கிறார் அவர்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *