சமூகவலைத்தளங்களிலிருந்து டிரம்ப்பை அகற்றியது தவறு! மெர்க்கல், அலெக்ஸ் நவால்ன்ய்.

டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டகிராம் உட்பட்ட முக்கிய சமூகவலைத்தளங்களால் டிரம்ப் தூக்கியெறியப்பட்டதை உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலர் பாராட்ட “கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவேண்டும்,” என்ற நிலைப்பாடு கொண்ட சில முக்கிய புள்ளிகள் விமர்சிக்கவும் செய்கிறார்கள்.

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான கடுமையான புத்தின் விமர்சகர் நவால்ன்ய், ஜேர்மன் தலைவர் மெர்க்கல் ஆகியோர் டிர்ம்ப்பை நிரந்தரமாகச் சமூகவலைத்தளங்கள் அகற்றியதைத் தவறு என்று விமர்சிக்கிறார்கள். கடும் வலதுசாரி அமைப்புக்களின் சமூகவலைத்தளமான Parler இடம் டிரம்ப் ஒருவேளை தனது கருத்துக்களை வெளிப்படுத்த இடம் தேடலாம். ஆனால், Parler ஐத் தனது தளத்தில் இயங்க விட்டிருந்த அமெஸான் நிறுவனம் அதன் தளத்தை மூடிவிட்டது.

ஒரு மனிதரின் கருத்துச் சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படைகளில் முக்கியமானது. அதைக் கட்டுப்படுத்தும் உரிமைகளோ, எப்படிப் பாவிப்பதென்று எல்லை வகுக்கும் கடமையோ தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருக்கலாகாது. ஒவ்வொரு நாட்டின் சட்ட உரிமைகள் மூலமாகத்தான் அவை கவனிக்கப்படவேண்டுமென்கிறார் அஞ்செலா மெர்க்கல்.

பதவியில் இருந்தபோது டிரம்ப் பற்பல தடவைகள் தனது எல்லையை மீறியிருக்கிறார், பொறுப்பில்லாத கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்பது உண்மையே. ஆனாலும், அவரை முழுமையாகத் தடைசெய்தது உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட, அரசியல் சார்பு கொண்ட நடவடிக்கையாகும் என்கிறார் நவால்ன்ய்.

பேஸ்புக் உகண்டாவில் சில அரசியல் கோட்பாட்டுத் தளங்களையும் மூடியிருப்பதாக அறிவிக்கிறது. உகண்டாவில் வரவிருக்கும் தேர்தலில் ஒருபக்கமாகக் பாதிக்கக்கூடிய கருத்துக்களை அரசின் திணைக்களமொன்று வெவ்வேறு பேஸ்புக் கணக்குக்கள் [போலிப் பெயர்கள்] மூலம் பரவிவந்ததாக அவை மூடப்பட்டதாகப் பேஸ்புக் தெரிவித்திருக்கிறது. உகண்டாவின் அரசோ, தாம் அக்கணக்குகளைப் பற்றிய விபரங்களை ஏற்கனவே பேஸ்புக்குக்கு அறிவித்திருந்ததாகவும் அவைபற்றி பேஸ்புக் எவ்விதத் தவறுகளையும் அதுவரை சுட்டிக்காட்டவில்லை என்றும் தெரிவிக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *