யேமனில் போரில் ஈடுபட்டிருக்கும் ஒரு பகுதியினரான ஹூத்திகள் தீவிரவாதிகள் என்று பிரகடனம் செய்கிறது அமெரிக்கா.

ஜனாதிபதி டிரம்ப்பின் நிர்வாகம் பதவியிலிருந்து விலகமுதல் எடுக்கும் கடைசி முக்கிய முடிவாக யேமனின் பெரும் பாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி போராளிகளை தீவிரவாதிகள் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறது. ஷீயா இஸ்லாத்தின் ஒரு பகுதியாகக் குறிப்பிடப்படும் மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் ஹூத்திகள் ஈரானின் ஆதரவைப் பெற்று வருபவர்கள் என்பதே காரணமாகும்.

சமீபத்தில் யேமனில் போரிடும் மற்றிரண்டு முக்கிய குழுவினரை சர்வதேச அங்கீகாரத்துடன் ஒன்றிணைத்து ஒரு அரசாங்கத்தை உண்டாக்கியது சவூதி அரேபியா. ஏற்கனவே ஹூத்திகளைத் தீவிரவாதிகளாக சவூதி கவனிக்கிறது. ஆனால், யேமனின் தலைநகரம் சனா உட்பட்ட பெரும்பாலான பிரதேசங்களைத் தனது கையகப்படுத்தி வைத்திருக்கும் ஹூத்திகள் சவூதியின் உபயத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் அரசை ஏற்றுக்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ திங்களன்று ஹூத்திகளைத் தீவிரவாதிகளாகக் குறிப்பிட்டதற்குச் சர்வதேசத்தின் பல பாகங்களிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. முக்கியமாக மனிதாபிமான உதவிகளை யேமனில் செய்துவரும் அமைப்புக்கள் அது பெரும் தவறு என்று குறிப்பிடுகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையால் என்றுமே இல்லாத அளவுக்கு உலகில் பாதிக்கப்பட்ட நாடு என்று குறிப்பிடப்படும் யேமனில் மக்கள் பெரும் கஷ்டத்தில் வாழ்கிறார்கள். பல ஆண்டுகளாகப் போருக்குள் அகப்பட்டிருக்கும் யேமனில் பெரும்பான்மையானவர்கள் தமது அன்றாட உணவுக்கு உதவி அமைப்புக்களையே நம்பியிருக்கிறார்கள். ஹூத்திகளைத் தீவிரவாதிகளாக அறிவித்திருப்பதன் மூலம் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கு உதவும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

காரணம், ஹூத்திகளின் அனுமதியின்றி பெரும்பாலான யேமனின் பகுதிகளுக்கு எவரும் உட்புக முடியாது, உதவ முடியாது. அவர்களுடன் தொடர்புகள் வைத்திருந்தால் அது அமெரிக்காவால் தீவிரவாதிகளுடன் தொடர்புகள் வைத்திருப்பதாகக் கருதப்படும் என்ற நிலைமை.

https://vetrinadai.com/news/yemen-airport-bomb-government/

அத்துடன் யேமனின் வெவ்வேறு இயக்கங்களுடன் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளில் ஹூத்திகளைப் பங்கெடுக்க அனுமதிப்பதும் இயலாததாகிவிடும். ஏனெனில், தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதாகவே அது கருதப்படும். 

இந்தக் காரணங்களால் ஏற்கனவே ஈரானின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஹூத்திகள் மேலும் அதிகம் ஈரானையே சாரவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாக்கப்பட்டிருக்கிறது என்று பல பகுதியிலிருந்து சுட்டிக்  காட்டப்படுகிறது. மைக் பொம்பியோவின் சார்பில் யேமனில் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உதவும் சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *