ஆத்தாவும் நானும்,

முத்தான முத்தல்லோ என்ன பெத்த ரெத்தினமே!
முத்தாட வந்துதிங்க என்னூட்டு சித்திரமே!
மூனாம் பெறயிதல்லோ முழுசாத்தா வளருமே!
முக்கனியா சொல்லெடுத்து எங்கூட பேசுமே!

சொத்தான சொத்தல்லோ நாங்கண்ட சொர்க்கமே!
சொல்லி சொல்லி தீராது என்னாச ராசாவே!
சேனாபதி எல்லாம் சேவ செய்ய வருவாங்க!
சேரனாட்டம் எம்பேரன் சேனையோட வாழ்வானே!

ஆத்தா நீயிங்க ஆசப்பட்ட சொன்னதாட்டம்
ஆலமரத்த போலத்தா அகண்டிருப்பேன் பாரு!
ஆகாயத்த போலவே நான் நிப்பேனே பாரு!
ஆளாகி நானுந்தா வாழ்வேனே நீயும்பாரு!

அழகான பூச்செண்டா நாஞ்சிரிப்பேனே பாரு!
ஆராத்தி எடுக்க நீயுந்தா வருவப்போ பாரு!
ஆயுளுக்கு நீயுந்தா நாளெல்லாம் ஒழச்சதுக்கு
ஆறுதலா நாயிருப்பேன் நாஞ்சொல்லுறத கேளு!

அம்மாவுக்கு அம்மாவா அப்பாவுக்கு அப்பாவா
ஆத்தா நீயென்ன ஆளாக்கதானே இங்கிருக்க!
ஆராரோ பாடுறயே ஒன்னாட்டம் யாரிங்க?
அய்யனாரே ஒன்னாட்டம் ஆளாகி வந்தாரோ!

எழுதுவது :

கவிஞர் மாலதி இராமலிங்கம்,
புதுச்சேரி.