இத்தாலியில் இறந்துபோய் இரண்டு வருடங்களாக வீட்டுக்குள் கிடந்த உடல் “தனிமை” பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

இத்தாலியின் பிரஸ்டீனோ நகரில் 70 வயது மாது ஒருவரின் இறந்துபோன உடல் வெள்ளியன்று கண்டெடுக்கப்பட்டது. அவர் எந்தக் குற்றங்களுக்கும் உட்படுத்தப்படவில்லை. வாழும் உறவினர்கள் எவருமற்ற அவரது வீட்டுக்கு இரண்டரை வருடங்களாக எவரும் போயிருக்கவில்லை.

இறந்துபோன மாதுவின் வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தில் இருந்த மரங்கள் விழுவதைக் கவனித்து அதைச் சுத்திகரிக்க நகர ஊழியர்கள் போனதாலேயே அவ்வுடல் கண்டெடுக்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் கடந்த இரண்டரை வருடங்களாக எவரும் அந்தப் பெண்ணைக் கண்டதில்லை என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. 

அந்தச் செய்தி தனிமை பற்றிய கேள்வியை இத்தாலியச் சமூகத்தில் மீண்டும் எழுப்பியிருக்கிறது.

“நாம் மறந்துபோன தனிமையில் வாடுதல் என்ற விடயம் எங்களுக்கு ஞாபகத்துக்கு வந்து கவலைகொள்ள வைக்கிறது. சொந்த விடயங்களை மட்டும் கவனிப்பவர்களாக மாறிவிட்ட நாம் மீண்டும் சக மனிதர்களைப் பற்றிய பிரக்ஞை உள்ளவர்களாக மீண்டும் மாறவேண்டும். எங்கள் உறவுகள், சுற்றிவர இருப்போர், சமூகம் ஆகியவைகள் பற்றி நாம் கவனமெடுக்கவேண்டும். தனிமையில் வாட எவரையும் அனுமதிக்கலாகாது,” என்கிறார் நாட்டின் குடும்ப நல அமைச்சர். 

2018 ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி 75 வயதுக்கு மேற்பட்டோரில் 40 % பேர் தனிமையிலேயே வாழ்கிறார்கள். அதேயளவானவர்கள் தமக்கு ஒரு அவசியம் நேரிடும்போது உதவி தேட உறவினர்களோ, நண்பர்களோ இல்லாத நிலையில் வாழ்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்