இஸ்ராயேல் – எமிரேட்ஸ் விமானச்சேவைகளில் இரண்டு பகுதியாருக்கும் இடையே சலசலப்பு.
இஸ்ராயேல் விமான நிலையங்களில் பாதுகாப்பைக் கண்காணித்து நிர்வகிக்கும் ஷின் பெட் அமைப்பு தெல் அவிவ்வுக்கு டுபாயிலிருந்து வரும் விமானங்களின் பாதுகாப்புத் திட்டங்கள் திருப்திகரமாக இல்லை என்று ஒரு மாதத்துக்கும் அதிகமாக விமர்சித்து வருகின்றன. எமிரேட்ஸ் விமானச் சேவையினர் அவைகளைச் சீர்செய்யாவிடின் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரிக்கின்றது ஷின் பெட்.
ஏற்கனவே பல தடவைகள் டுபாய் விமான அதிகாரிகளிடம் தமது அதிருப்தி பற்றிக் குறிப்பிட்ட பின்னர் டுபாய் விமான நிலையம் பெப்ரவரி 8 திகதி தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத மாற்றாங்களை மேலும் அறிமுகப்படுத்தியிருப்பதாக ஷின் பெட் குற்றஞ்சாட்டுகிறது. இவ்விடயங்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவுகளில் எவ்விதத்திலும் தொடர்புடையதல்ல என்று ஷின் பெட் சுட்டிக் காட்டுகிறது.
டுபாய் அதிகாரிகளின் பாதுகாப்புக்கள் தம்முடையவையோடு ஒன்றுபடுத்த முடியாத நிலையில் இருப்பதால் இரண்டு பக்கத்திலும் பயணிகள் பல சிக்கல்களை எதிர்பார்க்கிறார்கள். இது தொடருமானால் டுபாய் – தெல் அவிவ் விமான சேவைகள் நிறுத்தப்படும். அவை நிறுத்தப்படுமானால் எமிரேட்ஸின் வேறு பாகங்களில் இருந்து இஸ்ராயேலுக்குப் பறக்கும் இரண்டு நாட்டு விமான நிறுவனங்களின் சேவைகளும் நிறுத்தப்படவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும் என்று இஸ்ராயேல் எச்சரித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்