இந்தோனேசியாவின் “புவாயா காலுங் பான்” கழுத்திலிருந்த அணிகலன் அகற்றப்பட்டது..

சுலாவேசி தீவிலிருக்கும் பாலு நகரையடுத்த ஆறொன்றுக்குள் சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர் தனது கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயரை மாலையாக அணிந்த முதலையொன்றை அப்பகுதி மக்கள் கண்டார்கள். அதை “புவாயா காலுங் பான்” என்று அழைத்தார்கள். அதன் அர்த்தம் டயரைக் கழுத்திலணிந்த முதலை என்பதாகும். 

சுமார் 4 மீற்றர் நீளமுள்ள அந்த முதலையின் கழுத்து எப்படி அந்த டயருக்குள் மாட்டிக்கொண்டது என்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால், அந்த விலங்கு அதனால் கஷ்டப்படும் என்று புரிந்துகொண்டு அதை விடுவிக்க முயன்றார்கள். இரண்டு தடவைகள் அதைப் பிடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

அந்த நகர அதிகாரிகள் முதலையை டயருக்குள்ளிருந்து விடுவிப்பவர்களுக்குச் சன்மானம் அறிவித்து விட்டு பின்னர் அதை வாபஸ் வாங்கிக்கொண்டார்கள். காரணம், சன்மானத்துக்கு ஆசைப்பட்டு யாராவது அதைப் பிடிக்க முயன்று முதலை அவர்களைக் கடித்துவிடலாம் என்ற பயமாகும்.

இறுதியில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவன் உயிருள்ள கோழி, வாத்து ஆகியவற்றை இரையாகக் காட்டி மூன்று வாரப் பிரயத்தனத்துக்குப் பின்னர் அதைப் பிடித்து அதை அந்த டயரிலிருந்து விடுவித்திருக்கிறான். 

சாள்ஸ் ஜெ. போமன்