திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படாத லிபியாவில் இரண்டு பிரதமர்கள்!
லிபியாவில் டிசம்பர் 24 ம் திகதி நடத்தப்படவேண்டிய பொதுத்தேர்தல்கள் நடத்தப்படாததால் நாட்டின் வெவ்வேறு பாகங்களின் அதிகாரங்களிடையே ஏற்பட்ட பலப்பரீட்சை முற்றியதில் வியாழனன்று ஒரு சாரார் தமக்கென ஒரு பிரதமரைத் தெரிவுசெய்திருக்கிறார்கள். தற்காலிகப் பிரதமராக சுமார் ஒரு வருடமாக இருந்துவரும் அப்துல்ஹமீத் பெய்பாவைத் [Abdulhamid Dbeibah]தவிர லிபியாவின் கிழக்கிலிருக்கும் பிராந்தியப் பிரதிநிதிகள் பத்தி பஷ்ஹாகா என்பவரைத் தமக்குப் பிரதமராக வியாழனன்று தெரிந்தெடுத்திருப்பதாக அறிவித்தார்கள்.
லிபியாவின் சர்வாதிகாரியாக இருந்த கடாபி பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் இயற்கை வளங்களைக் கொண்ட லிபியாவை யார் ஆள்வது என்ற மோதல் வெவ்வேறு குழுக்களுக்குள்ளே எழுந்து, தொடர்ந்து வருகிறது. அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்பும் வெவ்வேறு சாராருக்கு சர்வதேச ரீதியில் வெவ்வேறு நாடுகள் தமது ஆதரவைக் கொடுத்து வருகின்றன.
எல்லோரையும் ஒருமைப்படுத்தும் விதத்தில் ஐ.நா சுமார் ஒரு வருடத்தின் முன்னர் சகல சாராரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இடைக்காலப் பிரதமராக அப்துல்ஹமீத் பெய்பாவைத் தெரிவு செய்திருந்தனர். பெய்பாவின் கடமை நாட்டில் தேர்தல் நடத்தும் ஒழுங்குகளைச் செய்து டிசம்பர் 24 இல் தேர்தலில் தெரிவுசெய்யப்படுகிறவர்களிடம் ஆட்சியை ஒப்படைப்பதாகும்.
இடைக்காலத்தில் வெவ்வேறு வளங்களையும், அதிகாரங்களையும் தமது ஆயுதப் பலத்தினால் கைப்பற்றிக்கொண்டு ஆளுபவர்கள், நாட்டின் பெரும்பாலானோருக்கு வாக்களிக்கும் அட்டைகள் கொடுக்கப்பட்டபின்னர் தமது அதிகாரம் பறிபோய்விடும் என்ற பயத்தில் தேர்தலை நடத்த இடம் கொடுக்காமல் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வியாழனன்று அப்துல்ஹமீத் பெய்பாவின் வாகனம் தனது பாதுகாப்புப் படையுடன் பயணமாகிக் கொண்டிருந்த சமயம் அதை ஆயுதம் தாங்கிய குழுவொன்று மறித்துத் தாக்கியிருக்கிறது. பெய்பா காயமேதுமின்றித் தப்பிவிட்டதாகத் தெரியவருகிறது.
அதையடுத்து, பெய்பாவின் ஆட்சி டிசம்பர் 24 உடன் முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டு பத்தி பஷ்ஹாகா என்ற போர் விமானியை ஒரு சாரார் பிரதமராக அறிவித்திருக்கிறார்கள். 2020 இன் பின்னர் லிபியாவில் ஓரளவு குறைந்திருந்த வன்முறைகள் மீண்டும் புதுப்பிக்கப்படலாம் என்ற அச்சம் அரசியல் அவதானிகளால் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர்களாகக் குறிப்பிடப்படும் இருவரும் லிபியாவின் வெவ்வேறு குழுவினரின் ஆதரவையும் தமக்காக்கிக்கொண்டு ஒருவரோடொருவர் மோதலாம் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்