“பார்ட்டிகேட்” விபரங்களுக்காக போரிஸ் ஜோன்சனைப் பொலீசார் தொடர்பு கொண்டார்கள்.

கொரோனாத்தொற்றுக் காலத்தில் அதைக் கட்டுப்படுத்த பிரிட்டிஷ் அரசு அமுலுக்குக் கொண்டுவந்த கடுமையான கட்டுப்பாடுகளைத் தானும் தனக்கு நெருங்கிய உயரதிகாரிகளும் மீறியதைப் பிரதமர் ஜோன்சன் ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருந்தார். அதுபற்றிய பாராளுமன்றத்தின் அதிகாரபூர்வமான விசாரணையின் ஒரு பகுதி விபரங்களும் வெளியாகி அவரைப் பதவி விலகச்சொல்லிக் கட்சிக்கு உள்ளிருந்தும், எதிர்க்கட்சிகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. கொரோனாக் கட்டுப்பாடுகளை மீறினாரா, எந்த அளவில் மீறப்பட்டது போன்றவைகளை விசாரிப்பதற்காக பொலிசார் போரிஸ் ஜோன்சனைத் தொடர்பு கொண்டிருப்பதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தார்கள்.

பொலீசாரின் விசாரணை முதல் கட்டத்தில் பல கேள்விகளடங்கிய ஆவணமாகும். அதற்காக அவர் நேர்மையுடன் ஏழு நாட்கள் பதிலளிக்கவேண்டும் என்று கோரப்பட்டிருக்கிறது. அக்கேள்விகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஜோன்சனின் நடவடிக்கைகளைப் பற்றிக் கேட்டிருக்கின்றன. அதிகார ரீதியான அக்கேள்விகளுக்கு ஜோன்சன் பதிலளிப்பார் என்று அவரது உதவியாளர் தெரிவித்தார்.

பிரதமரது இல்லத்தில் நடந்த சுமார் ஒரு டசினுக்கும் அதிகமான கூட்டங்களில் என்னென்ன நடந்தன என்பது பற்றிய அந்தக் கேள்விகள் போரிஸ் ஜோன்சன் தவிர சுமார் 50 பேருக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. ஜோன்சன் கலந்துகொண்ட குறிப்பிட்ட அந்தக் கூட்டங்களில் நடந்த களியாட்டம் போன்ற நடவடிக்கைகள் பற்றி முன்னாள் பிரதமர்களான தெரேசா மே, ஜோன் மேஜர் ஆகியோரும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறாரகள்.

சாள்ஸ் ஜெ. போமன்