ஜோன்சன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு இன்று அவரது கட்சியினர் வாக்களிப்பார்கள்.

“சட்டம் ஒழுங்குகளை மீறும் கலாச்சாரம்” ஒன்றின் உருவகமாக போரிஸ் ஜோன்சன் மாறியிருப்பதாகப் பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற காலத்திலிருந்தே போரிஸ் ஜோன்சன் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவை உண்மையென்றும் தெரியவந்திருக்கின்றன. கடைசியாக அவர் எதிர்கொண்ட “பார்ட்டிகேட்” குற்றச்சாட்டுக்களிலும் அவர் தவறிழைத்தது பல கோணங்களிலிருந்தும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் போரிஸ் ஜோன்சன் நாடு முழுவதும் போடப்பட்டிருந்த கொரோனாக்கட்டுப்பாடுகளைப் பல தடவைகள் மீறியதுமன்றி அதற்கான விமர்சனங்களை அலட்சியப்படுத்தியதையும் சுட்டிக்காட்டி அவரைப் பதவி விலகக் கோரி வருகிறார்கள். ஜோன்சனின் கட்சிக்குள்ளும் நீண்ட காலமாகவே அவரது நடவடிக்கைகள் பற்றிய விமர்சனங்கள் எழுந்து வந்தன. அவற்றின் விளைவாகவே இன்று, திங்களன்று மாலை அவர் தனது கட்சியினரிடையே எழுந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்கிறார்.

ஜோன்சனின் கொன்சர்வட்டிவ் கட்சியின் ஒழுங்குகளின்படி கட்சியின் 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அது பற்றிச் சகல பா.உ-க்களும் வாக்களிப்பார்கள். அந்த எண்ணிக்கையில் எழுத்தில் ஜோன்சன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றிய கோரிக்கை எழுப்பப்பட்டிருப்பதாக அதற்கான ஒழுங்குக்குழுவின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

இன்று மாலை 359 கொன்சர்வட்டிவ் கட்சி பா.உ-க்களிடையே நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் தோற்றால் போரிஸ் ஜோன்சன் கட்சித் தலைமை, நாட்டின் பிரதமர் பதவி இரண்டிலிருந்தும் விடுவிக்கப்படுவார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *