“வரும் வசந்தகாலம் நல்ல விடியலாக அமையும்”-மக்ரோன் புதுவருட செய்தி

ஆண்டின் தொடக்கம் கடுமையாக இருப்பினும் வரும் வசந்த காலம் பிரெஞ்சு மக்களுக்கு ஒரு புதிய விடிவாக இருக்கும் (“Le printemps 2021 sera le début d’un nouveau matin français”)அதிபர் மக்ரோன் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

எலிஸே மாளிகையில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவரது உரை இன்றிரவு எட்டு மணிமுதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த 64 ஆயிரம் மக்களுக்கும் மக்ரோன் தனது உரையின் ஆரம்பத்தில் அஞ்சலி செலுத்தினார்.

“ஏனையோரைப்போலவே இந்த டிசெம்பர் 31 நமக்கும் வழமை போன்று இல்லை. எங்கள் இல்லங்களில் குதூகலம் குன்றிப்போய் உள்ளது.” ஒரு வரலாற்றுச் சோதனையான இந்தக் கால கட்டம் எங்களின் ஒற்றுமையையும் வலிமையையும் வெளிப்படுத்தி இருக்கிறது. வரவிருக்கும் பயணங்களில் எமக்கு முன்மாதிரியான பல திசைகளைக் காட்டிச் சென்றுள்ளது. இன்று இங்கே நாங்கள் எழுந்து நிற்கக் காரணமான- தேசத்துக்காக தங்கள் அர்ப்பணிப்பை வழங்கிய- அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.”-என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பிரிட்டன் இன்று நள்ளிரவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறுவதை தனது உரையில் நினைவுகூர்ந்த மக்ரோன், “விலகிப்போனாலும் பிரிட்டன் இப்போதும் எமது நண்பனே.

அது என்றும் எங்கள் நேசநாடுதான் “எனக் குறிப்பிட்டார்.வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நாடளாவிய திட்டம் பற்றிக் குறிப்பிட்ட அதிபர் மக்ரோன்,” தடுப்பூசி ஏற்றுவதில் “நியாயப்படுத்த முடியாத தாமதங்கள் தவிர்க்கப்படும்” என்று உறுதி அளித்தார்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *