ஐரோப்பிய நாணய ஒன்றியத்தில் இணையவிருக்கும் கிரவேஷியாவின் முதலாவது நாணயம் வாபஸ் பெறப்பட்டது.

அடுத்த வருடம் ஐரோப்பிய நாணய ஒன்றியத்தில் இணைந்து கொள்ளப்போகும் கிரவேஷியா தனது நாணயமான குணாவைக் கைவிடும். பதிலாக எவ்ரோ நாணயம் அந்த நாட்டின் உத்தியோகபூர்வமான நாணயமாகும். அதைக் கொண்டாட வெளியிடப்படவிருக்கும் நாணயங்களின் பின் பக்கத்தில் பதிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் ஒன்று “திருடப்பட்டது,” என்று குற்றஞ்சாட்டப்பட்டதால் வாபஸ் வாங்கப்பட்டது.

கிரவேஷியா தான் வெளியிடவிருக்கும் நாணயங்களில் பதிக்கப்படும் படங்களைத் தேர்ந்தெடுக்கப் போட்டியொன்று அறிவித்திருந்தது. அதன் மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட நான்கு படங்களில் ஒன்று மார்ட்டன் [marten] என்ற மரநாய் போன்ற சிறு விலங்கு ஆகும். அதை வரைந்தவர் ஸ்டீபன் பிராஞ்கோவிச்.

மார்ட்டன் விலங்கின் தோல் தான் கிரவேஷியாவில் பணம் அறிமுகப்படுத்த முன்னர் பண்டமாற்றுக்காகப் பாவிக்கப்பட்டது. குணா என்பது அந்த மிருகத்தின் கிரவேஷிய மொழிச் சொல் ஆகும்.

பிராஞ்கோவிச் வரைந்த படம் ஸ்கொட்லாந்து போட்டோ கலைஞரான இயான் லீச்சின் படங்களிலொன்றை ஒத்திருந்ததாகப் பலரும் சுட்டிக் காட்டினர். லீச்சுக்கும் பலர் நேரடியாகவே தொடர்பு கொண்டு அதைத் தெரிவித்திருந்தனர். 

“மிக வேகமாகப் பலரும் அப்படம் என்னுடையதென்பதை அறிந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இல்லாவிட்டால் என் படம் பாவிக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாமலே போயிருக்கும். என் படத்தை எடுத்து வரைந்தவர் என்னிடம் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் கோரவில்லை. ஆயினும், அவர் அதை வாபஸ் வாங்கிக்கொண்டது சரியான முடிவாகும்,” என்கிறார் இயான் லீச்.

சாள்ஸ் ஜெ. போமன்