மாணவர்களால் அவமதிக்கப்பட்ட மாணவியைக் கையைப் பிடித்து பாடசாலைக்குக் கூட்டிச் சென்றார் ஜனாதிபதி.

கொஸ்தவிர் என்ற நகரிலிருக்கும் எம்பிளா அடேமா என்ற மாணவியின் வீட்டுக்கு வட மக்கடோனியாவின் ஜனாதிபதி ஸ்டெவோ பண்டாரொவ்ஸ்கி விஜயம் செய்தார். டௌன் சின்றம் என்ற குறைபாட்டுடன் வாழும் அந்தச் சிறுமியைச் சக மாணவ, மாணவியர் அவளது பாடசாலையில் கொடுமையாக நடத்துவதைக் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் பதினொரு வயதான எம்பிளாவைக் கையில் பற்றி நடந்து அவளைப் பாடசாலைக்கு அழைத்துச் சென்றார். 

“குறைபாடுகளுடன் வாழும் சிறார்களைக் கொடுமைப்படுத்தி அவர்களின் உரிமைகளைப் பறிப்பதை அரசு கடுமையாகக் கண்டிக்கிறது. அவர்களும் சகல உரிமைகளையும் கொண்டவர்களே. அவர்களை மதித்து அவர்களைச் சமூகத்தின் சகல இடங்களிலும் வரவேற்று கௌரவமாக நடத்தவேண்டும். இது ஒவ்வொரு மனிதரின் கடமையும் கூட,” என்ற செய்தி ஜனாதிபதியின் காரியாலயத்திலிருந்து வெளியிடப்பட்டது.

 சாள்ஸ் ஜெ. போமன்