“எத்தனை பேருக்குத் தொற்றியிருக்கிறது என்பதைப் பெரிதாக்காமல் கொவிட் 19 உடன் வாழப்பழகுங்கள்!”

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புக்கு கொடுந்தொற்றுக்களைக் கையாள்வது பற்றி ஆலோசனை கொடுக்கும் பிரத்தியேகக் குழுவின் தலைவர் அவ்வமைப்புக்குச் சமீப வாரங்களில் கொடுத்துவரும் அறிவுரை வித்தியாசமானதாகும். உலகின் சில பாகங்களில் கொவிட் 19 பெருந்தொற்றுக் காலம் முடிந்துவிட்டிருக்கலாம் என்கிறார் அவர்.

“ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேருக்குக் கொரோனாத்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதை உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு நிறுத்தவேண்டும். பதிலாக, நீண்ட கால நோக்கில் அந்தத் தொற்றுநோய் அவ்வப்போது ஆங்காங்கு எழும்போது நாடுகள் அதை எப்படிக் கையாளவேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளைக் கொடுக்கவேண்டும்,” என்கிறார் டேவிய் ஹெய்மான்.

ஒரு நாட்டில் எத்தனை பேருக்குக் கொவிட் 19 தொற்றியிருக்கிறது என்பது தற்போதைய நிலைமையில் எதையும் சொல்லவில்லை. நாட்டு மக்களிடையே அந்த நோய்க்கெதிரான பாதுகாப்புச் சக்தி எவ்வளவு உண்டாகியிருக்கிறது என்பதே முக்கியம். அதைக் கவனித்து நாடுகளில் அவ்வப்போது எழும் சளிக்காய்ச்சல், காசநோய் போன்றவையை எப்படி மருத்துவ சேவை கையாள்கிறதோ அதேபோல இவ்வியாதியையும் கையாளப் பழகிக்கொள்ளவேண்டும். கொவிட் 19 ஒரு மனிதரின் வாழ் நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தொற்றலாம் என்கிறார் ஹெய்மான்.

தடுப்பு மருந்துகள் ஒருவரைத் தொற்றிலிருந்து காப்பாற்றுவதில்லை. ஆனால், அதனால் ஒருவர் பெற்றிருக்கும் எதிர்ப்புச்சக்தி அவரைக் கொடுமையாக அந்த நோயால் பாதிக்கப்படாமல் காப்பாற்றுகிறது. கொவிட் 19 ஒருவருக்குச் சில சமயங்களில் குறைந்த காலகட்டத்திலும் சில சமயங்களில் நீண்ட காலத்துக்கும் வந்து போகும். 

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புக்குத் தனது குழு மேற்கண்ட ஆலோசனையைச் சமீப காலத்தில் பல தடவைகள் கொடுத்திருப்பதாக டேவிட் ஹெய்மான் குறிப்பிடுகிறார். அவரது ஆலோசனை பற்றி இதுவரை அந்த அமைப்பு எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்