வீட்டுவாடகைக் கட்ட வசதியில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்க்காததால் பல மில்லியன் அமெரிக்கர்கள் வீதிக்கு வரக்கூடும்.

வேகமாகக் கொரோனாத் தொற்றுக்கள் பரவிக்கொண்டிருந்ததைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வாடகை கட்டாவிட்டாலும் எவரையும் வீடுகளைவிட்டு விரட்டலாகாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணம், தொற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திணைக்களம் வீடில்லாதவர்கள் அதிகரித்தால் நெருக்கமாக வாழ்பவர்கள் அதிகரிப்பார்கள், விளைவாகத் தொற்றுக்களும் அதிகரிக்கும்  என்று கருதியதாலாகும். அந்த உத்தரவுக்கான கால எல்லை ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. 

குறிப்பிட்ட உத்தரவின் காலகட்டத்தை நீட்டுவதற்காக அமெரிக்கப் பாராளுமன்றம் முடிவெடுக்க வேண்டியிருந்தது. அதை உடனே செய்யும்படி வியாழனன்று ஜனாதிபதி ஜோ பைடன் பாராளுமன்றத்தைக் கேட்டிருந்தார். ஆனால், அதைச் செய்யாமல் அவர்கள் வெள்ளிக்கிழமை முதல் தமது கோடை விடுமுறைக்குப் போய்விட்டார்கள். 

வியாழனன்றே அந்த உத்தரவை வாதப் பிரதிவாதங்களின்றி நீடிக்கும்படி டெமொகிரடிக் கட்சியினர் பாராளுமன்றத்தில் கேட்டிருந்தனர். ஆனால், ரிபப்ளிகன் கட்சியினர் அதை மறுத்துவிட்டார்கள். தமது சக பாராளுமன்ற உறுப்பினர்களின் அலட்சியத்தின் மீது வெறுப்படைந்த சில டெமொகிரடிக் கட்சி பா.உ-க்கள் பாராளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே வெள்ளிக்கிழமை இரவு உறங்கினர்.

பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளை மாளிகையிலிருந்து அதற்கான தீர்வு சரியான தருணத்தில் எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால், அதுபற்றிய முடிவில் வெள்ளை மாளிகை தலையிடலாகாது என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்று குறிப்பிடுகிறது.

6.5 மில்லியன் வீடுகளில் வசிக்கும் 15 மில்லியன் அமெரிக்கர்கள் தமது வாடகையைச் செலுத்தாத நிலையில் இருக்கிறார்கள். வீட்டுக்காரர்களுக்குக் கிடைக்காத வாடகையின் மொத்தப் பெறுமதி சுமார் 20 பில்லியன் டொலர் என்று கணிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *