ஜெயப்பிரசாந்தியின் ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் வெளியாகியது
படைப்பாக்க முயற்சிகளிலும், ஆய்வு முயற்சிகளிலும் ஊக்கத்துடன் செயற்பட்டு வரும் செல்வி.ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம் எழுதிய ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் ஞாயிற்றுக்கிழமை(13.02.2022) வடமராட்சி கிழக்கு கலாசார பேரவையின் வெளியீடாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல்-10 மணிக்கு மருதங்கேணிப் பிரதேச செயலரும், வடமராட்சி கிழக்கு கலாசாரப் பேரவையின் தலைவருமான கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் இ.தமிழ்மாறன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து சென்.ஹென்றிஸ் கல்லூரியின் பிரதி அதிபர் அருட்திரு.ஆன்சன் றெஜிக்குமார் ஆசியுரை ஆற்றினார்.
கலாசார உத்தியோகத்தர் செல்வசுகுணா வரவேற்புரை நிகழ்த்தினார். மருதங்கேணி உதவிப் பிரதேச செயலர் ப.தயானந்தன் வாழ்த்துரை நிகழ்த்தினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து நூலின் வெளியீட்டுரையினை ஜீவநதியின் பிரதம ஆசிரியர் க. பரணீதரன் வழங்கினார்.
மருதங்கேணிப் பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தியும், நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தமிழ்மாறனும் இணைந்து நூலை வெளியிட்டு வைக்க முதற்பிரதியை ஆணிவேர் சமூக அபிவிருத்தி அமைப்பின் சார்பாக அதன் உறுப்பினரும், ஊடகவியலாளருமான ஜெ.பானுசந்தர் பெற்றுக் கொண்டார்.
கொழும்பு பல்கலைக்கழக கல்வியியற்பீட விரிவுரையாளர் அ.பௌநந்தி மற்றும் எழுத்தாளர் ந.மயூரரூபன் ஆகியோர் நூலின் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்தினர்.
பிரதம விருந்தினர் உரையினைத் தொடர்ந்து ஏற்புரையையும், நன்றியுரையையும் நூலாசிரியர் ஜெயப்பிரசாந்தி நிகழ்த்தினார்.
மேற்படி நிகழ்வில் அரச,அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.