டிரம்ப் நிறுவனத்துக்காக தாம் செய்து கொடுத்த வருடாந்திர நிதி அறிக்கைகளுக்குத் தாம் பொறுப்பல்ல என்கிறது அவற்றைச் செய்த நிறுவனம்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது போடப்பட்டு, விசாரிக்கப்பட்டு வரும் பல வழக்குகளிலொன்று அவரது நிறுவனம் தனது சொத்துக்களையும், வருமானங்களையும் ஊதிக் காட்டி அதை வைத்துக் கடன்களைப் பெற்றிருக்கிறது என்பதாகும். அதற்கான கணக்கு வழக்கு விபரங்களைப் பல வருடங்களாகத் தொடர்ந்து செய்து வந்த Mazars USA நிறுவனம் தாம் அந்த வருடாந்திர கணக்கு வழக்கு விபரங்களுக்குப் பொறுப்பு எடுக்க முடியாது என்று அறிக்கை விட்டிருக்கிறது. Mazars USA நிறுவனத்தின் அதி முக்கிய வாடிக்கையாளர் டிரம்ப் நிறுவனம் ஆகும்.
“டிரம்ப் நிறுவனத்துக்காக நாம் செய்து கொடுத்த கணக்கு வழக்கு விபரங்களை ஆதாரமாகக் கொண்டு எதையும் செய்யாதீர்கள். இந்த முடிவுக்கு நாம் வரக் காரணம் நியூ யோர்க் வழக்கறிஞர் திணைக்களமும், நாமும் டிரம்ப் நிறுவனம் எங்களுக்குச் சமர்ப்பித்திருந்த பத்திரங்களின் பின்னணிகளை விசாரித்தது ஆகும்,” என்று Mazars USA நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
டிரம்ப் மீதும் அவரது நிறுவனத்தின் மீதும் நடத்தப்பட்டு வரும் அந்த விசாரணைகளுக்காக அவரது மகனுக்கும், மகளுக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த விசாரணைகள் வேண்டுமென்றே டிரம்ப்பை அவமானப்படுத்த நடாத்தப்படுகின்றன என்று டிரம்ப் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அதனால் அவ்விசாரணைகளில் ஈடுபடும் வழக்கறிஞரை டிரம்ப் பகிரங்கமாக மேடைகளில் தாக்கியும் வருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்