பிரிட்டிஷ் இளவரசர் ஆண்டிரூ தன் மீது கற்பழிப்புக் குற்றஞ்சாட்டிய பெண்ணுடன் சமரச உடன்படிக்கை செய்துகொண்டார்.

வெர்ஜினியா ஜிப்ரே என்ற பெண் தான் 17 வயதாக இருக்கும்போது பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் II- இன் இளைய மகன் ஆண்டிரூவால் கற்பழிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்தார். அப்பெண்ணுக்குப் பெரும் தொகையொன்றைக் கொடுத்து இளவரசன் ஆண்டிரூ அவ்வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டது.

சமரச ஒப்பந்தத்தின்படி இளவரசன் ஆண்டிரூ 12 மில்லியன் டொலரைக் கொடுக்கவிருப்பதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. அந்தத் தொகையில் 10 மில்லியன் டொலர் வெர்ஜினியா ஜிப்ரேக்க்கும் 2 மில்லியன் கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் அமைப்பு ஒன்றுக்கும் போய்ச்சேரும் என்கின்றன அவ்விபரங்கள். வெர்ஜினியா ஜிப்ரே சமீப வருடங்களில் கற்பழிப்புகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு அமைப்பை நிறுவி அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

சமரச ஒப்பந்தம் பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்த இளவரசர் ஆண்டிரூ ஜெப்ரி எப்ஸ்டைன் போன்றவர்களுடன் தான் நட்பு வைத்திருந்ததற்காக வருத்தம் தெரிவித்தார். அத்துடன் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்காகக் குரல் கொடுத்துவரும் வெர்ஜினியா ஜிப்ரேயின் தளராத போராட்டத்தைப் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இளவரசர் ஆண்டிரூ சமீப வருடங்களில் பொருளாதார ரீதியில் மிகவும் நலிவடைந்து இருப்பதாகப் பல செய்திகள் வந்திருக்கின்றன. அதனால் சமரச ஒப்பந்தத்துக்கான 12 மில்லியன் டொலர் அவரிடம் இருக்கச் சாத்தியமில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது. எனவே, அந்தத் தொகை எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்பதைப் பற்றிய விபரங்களை பிரிட்டிஷ் அரச குடும்பம் வெளிப்படுத்தவேண்டும் என்று பத்திரிகைகள் கோருகின்றன.

ஆண்டிரூவின் தாயாரான எலிசபெத் மகாராணி அத்தொகையை பிரிட்டிஷ் அரசின் கஜானாவிலிருந்து கொடுக்கக்கூடாது என்று குரல் எழுப்பப்படுகிறது. பிரிட்டிஷ் மக்களின் வரிப்பணம் ஆண்டிரூவின் ஒப்பந்தத்துக்காகச் செலவிடப்படுவதை எவரும் விரும்பவில்லை. குறிப்பிட்ட தொகையை மகாராணி தனது சொந்தச் சொத்திலிருந்து கொடுப்பதாக பிரிட்டிஷ் அரண்மனை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்