இத்தாலியின் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் நடந்த பாலியல் குற்றங்கள் பற்றி விசாரிக்கும்படி குரலெழுப்பப்படுகிறது.
இத்தாலியின் திருச்சபைக்குள்ளிருந்த பாதிரியார்கள் போன்றவர்களின் பாலியல் இச்சைக்குப் பலியாகியவர்கள் அதைப் பற்றிய விசாரணைகள் நடாத்தப்படவேண்டுமென்று தமது வழக்கறிஞர்கள் மூலம் குரலெழுப்புகிறார்கள். சமீபத்தில் முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட் XVI தான் மேற்றிராணியாராக இருந்த காலத்தில் தனது தேவாலயப் பிராந்தியத்தில் நடந்த பாலியல் குற்றங்களைத் தான் மறைத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
பக்கத்து நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், போர்த்துக்கால், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் கத்தோலிக்க திருச்சபைகளினுள் கடந்த காலத்தில் நடந்த பாலியல் குற்றங்களை விசாரிக்கக் குழுக்களை நிறுவியிருந்தன. அவைகளின் அறிக்கைகள் பல்லாயிரக்கணக்கானவர்கள் திருச்சபைக்குள்ளிருந்த பாதிரியார்கள், உதவியாளர்களால் செய்யப்பட்ட குற்றங்களை வெளிக்கொண்டுவந்தன. இத்தாலியிலோ கத்தோலிக்க சமய பீடம் அரசியலில் பலமாக இருப்பதால் அப்படியான கோரிக்கைகளை இதுவரை நிராகரித்தே வருகின்றது.
பிரான்சிஸ்கோ ஸனார்டி என்ற பாலியல் குற்றத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் Rete L’Abuso என்ற குழுவை அமைத்து அதன் மூலம் தன்னைப் போல இத்தாலியத் திருச்சபையினரால் பாதிக்கப்பட்டவர்களின் குரலை வெளிப்படுத்தி நீதி கேட்டு வருகிறார். கத்தோலிக்க திருச்சபை தனது ஆவணங்களைத் திறந்த நடந்த குற்றங்களையும் அவற்றைச் செய்தவர்கள், மறைத்தவர்களை வெளியிடவேண்டும் என்று குரல் கொடுக்கிறது அந்த அமைப்பு.
இத்தாலிய கத்தோலிக்க மேற்றிராணியார்களின் அமைப்பு ஒரு வழியாக அது பற்றிய விசாரணைகளை நடத்தலாமா என்பது பற்றி யோசித்து வருகிறது. பிரான்சில் அதுபற்றி விசாரித்த குழு அங்கே ஆகக்குறைந்தது 330,000 பாலர்கள் சுமார் 70 வருடங்களில் சுமார் 3,000 கத்தோலிக்க குருமாரின் இச்சைகளுக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்று வெளிப்படுத்தியது. அதேபோன்ற அவமானம் இத்தாலியத் திருச்சபைக்கு ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்றிராணியர்களின் அமைப்புத் தலைவர் விசாரணைகளின் மூலம் எண்ணிக்கையை வெளிப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்துவருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்