ஓரிரு வாரங்களில் சந்திரனில் விழவிருக்கும் விண்கலம் யாருடையது என்ற சர்ச்சை.
விண்வெளியில் சுற்றிக்கொண்டிருந்த கைவிடப்பட்ட விண்கலமொன்று மார்ச் நாலாம் திகதி சந்திரனில் விழுந்து அழியவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. முதலில் வந்த செய்திகள் அது அமெரிக்க நிறுவனமான Space-X, இன் விண்கலம் என்று குறிப்பிட்டிருந்தது. அது தவறென்று பின்னர் குறிப்பிடப்பட்டு அது சீனாவினால் அனுப்பப்பட்ட விண்கலமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்க விஞ்ஞானி ஒருவரால் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட விண்கலம் யாருடையதென்ற செய்தியும், பின்பு அது சீனாவுடையதாக இருக்கலாம் என்று குறிப்பிடப்படுவதும் புதிய ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சந்திரனில் விழப்போகும் பாவிப்பற்ற அந்த விண்வெளிக் குப்பை யாருடையதாக இருப்பினும் இந்தத் தருணத்தில் பிரச்சினைக்கு உரியதல்ல.
உலகின் பல நாடுகள் மட்டுமன்றி நிறுவனங்களும் வெவ்வேறு காரணங்களுக்காக விண்கலங்களை விண்வெளியில் பறக்க விட்டு வருகின்றன. அவைகளின் பாவிப்புக்காலம் முடிந்தவுடன் அவை தொடர்ந்தும் குப்பையாக விண்ணிலேயே சுற்றிக்கொண்டிருக்கின்றன. அந்தக் குப்பைகள் எத்தனை துண்டுகளாகின்றன, எந்த வழியில் பறக்கின்றன, எங்கே, எப்போது விழும், எதனுடனாவது மோதுமா என்பது பற்றிய விபரங்கள் எவரிடமும் கிடையாது என்பது பெரும் பிரச்சினையாகி வருகிறது. அது எதிர்காலத்தில் மேலும் பிரச்சியையாகும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்களாலும், விஞ்ஞானிகளாலும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.
யாருடையது என்று அறியப்படாத பொருட்கள் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருப்பதும், சந்திரனில் அல்லது பூமியில் விழுவதும் ஆராய்ச்சியாளர்களுக்கு முட்டுக்கட்டையாக மாறும் என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்