அண்டிபயோட்டிக்காவால் மாசுபடுத்தப்பட்ட நீர்நிலைகள் உலகில் மேலுமொரு பெருந்தொற்று நோயை உண்டாக்கலாம்!

மனிதர்களால் பாவிக்கப்படும் மருந்துகள் கழிவுகளாக வெளியேறி நிலக்கீழ் நீரில், சுற்றிவர உள்ள சூழலில் கலக்கின்றன. அடுத்த கட்டமாக அவை எம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் பரவி அவற்றை மாசுபடுத்துகின்றன. அந்த நீர் நிலைகளையொட்டி வாழும் உயிரினங்கள், விலங்குகள், கிருமிகளெல்லாம் அந்த மருந்துகளின் எச்சங்களை உட்கொள்வது மூலம் அவை அண்டிபயோட்டிக்கா மருந்துகளுக்கான எதிர்ப்புச்சக்தியைத் தம்மிடம் வளர்த்துக்கொள்கின்றன. அதனால் எமது மோசமான நோய்களுக்கான மருந்துகளில் அதிமுக்கிய மருந்தாக இருக்கும் அண்டிபயோட்டிக்கா பயனில்லாமல் அல்லது வீர்யத்தை இழக்கும் சாத்தியம் மிக அதிகம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

எனவே உலகின் நீர் நிலைகளில் எங்கெங்கு எந்த அளவில் மருந்து எச்சங்கள் கலந்து கிடக்கின்றன என்பது பற்றிய பரந்த ஆராய்வு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. உலகின் கண்டங்களிலிருக்கும் 104 நாடுகளின் 258 ஆறுகளில் அந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. வழக்கமாகப் பாவிக்கப்படும் 61 மருந்துவகைகள் அந்த நீர் நிலைகளையொட்டியுள்ள 1,000 பகுதிகளில் எத்தனை பரவியிருக்கிறது என்று அந்த ஆராய்ச்சி கண்டறிந்தது. 

ஆராய்ச்சிகளின் முடிவின்படி உலகின் கால் பங்கு நீர் நிலைகள் மனிதர்களைப் பாதிக்கக்கூடிய அளவில் மருத்துவ எச்சங்களால் மாசுபட்டிருக்கின்றன. இந்த ஆராய்ச்சி பெரும்பாலும் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவைவிலேயே நடத்தப்பட்டிருப்பதால் ஆராய்வுக்குட்படுத்தப்பட்ட இடங்கள் போதாது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்