இந்தியாவை விடப் பொருளாதாரத்தில் வளர்ந்த பங்களாதேஷ் மிகப் பெரும் விலையைக் கொடுத்திருக்கிறது.

மிகக் குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடு என்ற ஐ.நா-வின் பட்டியலிலிருந்து விலக்க்கப்படும் நிலையிலிருக்கிறது பங்களாதேஷ். தனி மனித சராசரி வருமானத்தில் இந்தியாவைத் தாண்டிவிட்ட பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றபோது மிகவும் வறிய நாடாக இருந்தது. அதன் பின்னர் அதன் வளர்ச்சி தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ஒரு வெற்றிக் கதையாகக் குறிப்பிடப்படுகிறது.

169 மில்லியன் மக்களைக் கொண்ட பங்களாதேஷ் உடைகளைத் தயாரிக்கும் உலகின் முக்கிய நிறுவனங்களுக்குச் சேவை செய்து வருவதாலேயே சமீப வருடங்களில் கணிசமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. அதன் விளைவாகச் சமூக முன்னேற்றமும், சுபீட்சமும் நாட்டு மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. வருடாவருடம் சுமார் 50 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியைச் செய்யும் பங்களாதேஷின் 80 % ஏற்றுமதி உடைகள் சம்பந்தப்பட்ட தயாரிப்புக்களாகும்.

பங்களாதேஷின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் விலையாக நாட்டின் சூழல் பலிகொடுக்கப்பட்டிருப்பதாக நாட்டின் சூழல் பேணும் அதிகாரம் குறிப்பிடுகிறது. தலைநகரான டாக்கா அமைந்திருந்து பூரிகங்கா நதியானது தற்போது நாட்டின் மோசமான சாக்கடையாக மாறியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. நீர்ப்பரப்பை நெருங்கும்போது மக்கள் சுகமான, இதமான காற்றை உணர முடிவதற்குப் பதிலாக மூக்கைப் பிடித்துக்கொண்டே அப்பகுதியை நெருங்கவேண்டியிருக்கிறது. அத்தனை மோசமான நாற்றமே அப்பகுதியில் பரவியிருப்பதாக மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

அந்த நீர்ப்பரப்பில் 2020 இல் நீரின் தரம் பற்றிச் சோதித்தபோது அது நச்சுத் தன்மையுள்ள இரசாயணங்களை அனுமதிக்கப்பட்ட அளவை விட ஆறு மடங்கு அதிகமாகக் கொண்டிருந்ததாக நாட்டின் நதிகள் பராமரிக்கும் அதிகாரம் தெரிவிக்கிறது. உடைகள் தயாரிப்பில் பாவிக்கப்படும் இரசாயணப் பொருட்களின் எச்சங்களைத் தொழிற்சாலைகள் நதிகளிலேயே வெளிவிடுகிறது. அந்தக் கழிவுகள் அந்த நீர்ப்பரப்பை அண்டி வாழ்பவர்கள், அங்கே தொழில் செய்பவர்களுக்குப் பல சுகவீனங்களை உண்டாக்குகின்றன. தோல் வியாதிகள், சுவாசிக்கும் அங்கங்கள் முதல் புற்றுநோய் போன்ற நோய்கள் வரை அதிகரித்து வருகின்றன. கழிவுகளில் சில பிராண வாயுவையும் பாதிப்பதால் நீரில் அந்த வாயுவின் பங்கு பெருமளவு குறைந்திருக்கிறது. அது அந்த நீரில் வாழும் உயிரினங்களைப் பாதித்து வருகிறது.

அந்தப் பிராந்தியத்தில் செயற்படும் சுமார் 3,500 பெரிய உடை தயாரிக்கும் தொழிற்சாலைகளின் சங்கமோ தாம் அரசிடமிருந்து அனுமதி பெற்ற அளவான கழிவுகளையே வெளியிடுவதாகச் சாதிக்கிறார்கள். நாட்டின் நீர் நிலை பேணும் உத்தியோகத்தர்களுக்குத் தொழிற்சாலையின் நிர்வாகங்களை லஞ்சம் கொடுத்துவிட்டு அளவுக்கதிகமான நச்சுப்பொருட்களை வெளியிடுவதாகச் சூழல் ஆதரவாளர்கள் குறிப்பிடுகிறார்கள். தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் வன்முறையால் பாதிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *