பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு சிறீலங்கா வழியாக பங்களாதேஷுக்குச் சென்றடைந்த போலி இந்திய நோட்டுக்கள்.

போலி நோட்டுகளிலான சுமார் 73.5 மில்லியன் இந்திய ரூபாய்கள் பங்களாதேஷில், டாக்காவில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்த விசாரனைகளில் பாத்திமா அக்தார் ஒபி, அபு தாலிப் என்ற இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்புள்ள மேலுமொரு வீடும் அங்கேயிருந்த இரகசிய அறையொன்றையும் கள்ளப் பணத்தையும் பொலீசார் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானைச் சேர்ந்த இருவரின் உதவியுடன் அந்த நோட்டுக்களை சிறீலங்கா வழியாக பளிங்குக்கல் கொண்டுவரும் பெட்டிகளில் கொண்டுவந்ததாக அபு தாலிப் மூலம் தெரியவந்திருக்கிறது. குறிப்பிட்ட பாகிஸ்தானிகள் இருவரும் இந்தியாவின் கள்ள நோட்டுக்களைத் தயாரிப்பதில் ஏற்கனவே தெரியவந்தவர்களாகும். பங்களாதேஷின் சட்டோகிராம் துறைமுகத்தின் வழியே அவை வந்திறங்கியிருக்கின்றன.

குறிப்பிட்ட கள்ள நோட்டுத் தயாரிப்பு, வினியோகம் சம்பந்தமாகத் தமக்குக் கிடைத்த துப்புக்களின் பேரில் பல நாட்களாகக் குறிப்பிட்ட நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்ததன் மூலம் அவர்களைக் கைதுசெய்ய முடிந்ததாக பங்களாதேஷ் பொலீஸ் தெரிவித்தது.

சாள்ஸ் ஜெ. போமன்