துருக்கியின் 16 மாகாணங்களில் அகதிகள் உட்பட வெளிநாட்டவர் குடியேற அனுமதி மறுக்கப்படுகிறது.
சுமார் 85 மில்லியன் குடிமக்களைக் கொண்ட துருக்கியில் சுமார் 3.7 மில்லியன் சிரியர்களும், 1.7 மற்றைய வெளி நாட்டவர்களும் வாழ்ந்து வருகிறார்கள். சமீப வருடங்களில் சிரியாவில் ஏற்பட்டிருக்கும் உள் நாட்டுப் போரால் புலம்பெயர்ந்து துருக்கியில் வாழும் சிரியர்கள் குறிப்பாகச் சில மாகாணங்களில் செறிவாக வாழ்கிறார்கள். உதாரணமாக, அங்காரா, இஸ்தான்புல் போன்ற சிரியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ஆங்காங்கே இனக்கலவரங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அகதிகளாக துருக்கியில் வாழ்ந்துவரும் சிரியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீது குறிவைத்த தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஓரிரு அரசியல் கட்சிகளும் வெளிநாட்டவர் மீது வெறுப்பை உமிழ்ந்து பரப்பி வருகிறார்கள். வன்முறைகள், குழப்பங்கள் வெளிநாட்டவர்கள் மீது குறிவைக்கப்பட்டிருப்பதைத் தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக 25 % அதிக வெளிநாட்டவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து ஒரு சாராரை வெளியேற்றவும், மேலும் வெளிநாட்டினர் அங்கே குடியேறாமல் தடுக்கவும் துருக்கிய அரசு முடிவு செய்திருக்கிறது.
இஸ்தான்புல், அங்காரா, அந்தாலியா, புர்ஸா, இஸ்மீர் மற்றும் ஹத்தாய் ஆகிய மாகாணங்களில் சிரியர்கள் நகரின் 25 % க்கும் அதிகமான குடிமக்களாக இருக்கிறார்கள். அந்த நகரங்களில் வெளிநாட்டினர் மேலும் குடியேறுவதை ஏற்கனவே அரசு தடுத்துவிட்டது.
வெளிநாட்டவர்கள் வாழ்ந்துவந்த 309 கைவிடப்பட்ட கட்டடங்கள் தகர்க்கப்பட்டு 177 வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு, சுமார் 4,500 சிரியர்கள் சில நகரங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் துருக்கிய அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள்.
இவ்வருட ஆரம்பம் வரை 193,000 சிரியர்களுக்குத் துருக்கிய குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும், 700,000 க்கும் அதிகமான சிரியக் குழந்தைகள் துருக்கியில் பிறந்திருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன
சிரியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளால் மேலும் பல சிரியர்கள் துருக்கியின் எல்லைகளில் குவிந்து வருவதாக துருக்கியின் உள்நாட்டு அமைச்சர் தெரிவித்தார். அவர்கள் பொருளாதார காரணங்களால் புலம்பெயர்ந்திருப்பதால் அவர்கள் போரால் பாதிக்கப்பட்டு வரும் அகதிகள் போலக் கையாளப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்