முதல் தடவையாக கொவிட் 19 தடுப்பு மருந்துத் தேவையைவிட அதிகமான மருந்துகள் கையிருப்பில்.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் உலகின் வறிய நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஒழுங்குசெய்து விநியோகிப்பதற்காக அமைக்கப்பட்ட “கொவக்ஸ்” தன்னிடம் ஜனவரியில் 436 மில்லியன் தடுப்பு மருந்துகள் கைவசமிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், தடுப்பு மருந்துத் தேவையுள்ள நாடுகளிடமிருந்து 100 மில்லியன் தடுப்பு மருந்துகளுக்கான வேண்டுதலே கிடைத்திருக்கிறது. அந்தத் தொகை இவ்வருடம் மே மாதம் வரையான தேவையாகும்.

கொவிட் 19 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்கள் உலகுக்குத் தேவையான தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதற்குத் திணறிய காலம் கடந்து போய் முதல் தடவையாக கையில் 300 மில்லியன் தடுப்பு மருந்துகளை வைத்துக்கொண்டு தேவையானவர்களைத் தேடும் நிலைமை “கொவக்ஸ்” அமைப்புக்கு முதல் தடவையாக உண்டாகியிருக்கிறது. 

நிலைமைக்கான காரணம் பெரும்பாலான மக்கள் தடுப்பு மருந்து போட்டுக்கொண்டதால் அல்ல. கொவிட் 19 தடுப்பு மருந்துகளைத் தேவையானவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்குமளவு குளிர்சாதன, போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பல வறிய நாடுகள் தவிப்பதாலாகும். அதன் விபரங்களை அறிந்து தீர்வுகளைத் தேடுவதற்காக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் நைஜீரியாவில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது.

ஆபிரிக்க ஒன்றியத்திலிருக்கும் 55 நாடுகளில் 44 நாடுகள் தம்மிடம் தடுப்பு மருந்துகளைப் பாதுகாத்து வைக்கும் குளிர்சாதன வசதி போதுமான அளவுக்கு இல்லை என்று தெரிவித்தன. வெவ்வேறு நாடுகளில் அது வெவ்வேறு படியில் இருந்தன.

தடுப்பு மருந்துகள் தேவையானவர்களைச் சென்றடையும் வரையான உறையும் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்சாதன வசதியுள்ள வாகனப் போக்குவரத்துச் சங்கிலி ஆகியவற்றை ஒழுங்கு செய்வதற்கான நிதியை கொவாக்ஸ் அமைப்பு வசதியுள்ள நாடுகளிடம் கோரியிருக்கின்ரது. தேவையான 5.2 பில்லியன் டொலரில் இதுவரை 195 மில்லியன் டொலரையே தம்மால் திரட்ட முடிந்ததாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்