சுமார் 14,000 “ஆவி விமானங்கள்” மார்ச் 2020 – செப் 2021 வரை பிரிட்டன் விமான நிலையங்களிலிருந்து பறந்தன.
விமானத்தின் அளவில் 10 % கூட நிறையாத [“ஆவி விமானங்கள்”] சுமார் 14,000 விமானங்கள் கொரோனாத் தொற்றுக்காலத்தில் பிரிட்டனின் விமான நிலையங்களிலிருந்து பறந்ததான விமானப் போக்குவரத்துப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் 32 விமான நிலையங்களிலிருந்து சர்வதேச விமானங்கள் மிகக் குறைந்த பயணிகளுடன் அக்காலகட்டத்தில் பறந்திருக்கின்றன. அவற்றில் சுமார் 4,900 விமானங்கள் ஹீத்ரோவிலிருந்து பறந்தன.
விமான நிலையங்களில் விமானங்கள் தமக்குக் கிடைத்த ஏறும், இறங்கும் அனுமதி இலக்கத்தில் 80 % ஐப் பாவித்தால் தான் அதற்கடுத்த வருடத்திலும் அதே எண்ணிக்கையில் போக்குவரத்துக்கு அனுமதி கிடைக்கும் என்பது நியதி. அதனால், வழக்கமாகவே விமான நிறுவனங்கள் தமது விமானங்களில் குறிப்பிட்ட அளவு “ஆவி விமானங்களை” அனுமதிக்கின்றன.
“கொரோனாத் தொற்றுக் காலத்தில் விமான நிறுவனங்கள் வழக்கம் போலத் தமது போக்குவரத்தில் 80 % ஐப் பாவிக்கவேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தன. அதனால், அவர்கள் “ஆவி விமானங்களை” இயக்கவேண்டிய தேவை இருக்கவில்லை,” என்கிறார் விமானப் போக்குவரத்து அமைச்சர்.
ஹீத்ரோ விமான நிலையத்தின் நிர்வாகி குறிப்பிட்ட “ஆவி விமானங்கள்” சரக்குகளை ஏற்றிச் செல்லப் பயன்பட்டதாகக் குறிப்பிடுகிறார். பொழுதுபோக்குப் பயணங்களுக்காக அமெரிக்க, சீன எல்லைகள் மூடப்பட்டிருந்த காலத்தில் அந்த நாடுகளுக்கான சரக்குகளைக் கொண்டுசெல்லும்போது ஒரு சில பயணிகளும் பறந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
எப்படியாயினும் “ஆவி விமானங்கள்” பற்றிய விபரங்கள் விமானப் போக்குவரத்தின் சுற்றுப்புற சூழல் பாதிப்பு பற்றிய கேள்விகளை உருவாக்கியிருக்கிறது. பெருமளவில் சுற்றுப்புற சூழலைப் பாதிக்கும் போக்குவரத்தான விமானங்கள் பயணிகள் நிறையாத நிலையில் பறக்காமல் கட்டுப்படுத்துவது எப்படி என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்