பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின் சில விளைவுகள்.

“பிரிட்டிஷ் மக்களுக்கான என் நத்தார் பரிசு” என்று பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் குறிப்பிட்ட பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான பிரிவினைக்குப் பிறகான நிலைப்பாடு பற்றிய ஒப்பந்தத்தின் விபரங்கள் எல்லாம் தெரியச் சில காலமாகலாம். 2,000 பக்கங்களுக்கும் அதிகமான நீண்ட அந்த ஒப்பந்தத்தின் சில விடயங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தயாரிப்புக்களையும் பிரிட்டனின் தயாரிப்புக்களையும் மற்றைய பக்கத்தாருக்கு விற்பனை செய்யும் போது இறக்குமதி, ஏற்றுமதி வரிகள் இருபக்கமும் விதிக்கப்பட மாட்டாது. இதன் மூலம் திடீரென்று குறிப்பிட்ட பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதும், விலை உயர்வதும் இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது

சுற்றுப்புற சூழல் சட்டங்கள், தொழிலாளர்களுக்கான அனுகூலங்களிலும் இரண்டு பாகத்திலும் ஒரே விதமான சட்டங்கள், கட்டுப்பாடுகளே நிலவும். எந்தப் பகுதியாரும் அரச மான்யத்தை இரையாகப் போட்டு நிறுவனங்களைத் தங்கள் பக்கத்தில் முதலீடுகள் செய்து, வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபடலாகாது. அப்படி ஏதாவது ஒரு பக்கம் செய்தால் மற்றப் பக்கத்தினர் வரிகள் மூலம் எதிர்பாகத்தைத் தண்டிக்கலாம்.

பிரிட்டிஷ் மக்களில் பெரும்பாலானோர் பிரிவினைக்காக வாக்களிக்கக் காரணமாக இருந்த ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இனிமேல் பிரிட்டனில் எதையும் நிர்ணயிக்க முடியாது. 

ஒப்பந்தத்தின் மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருந்த மீன்பிடிக்கும் உரிமைகள் பற்றி ஏற்படுத்தப்பட்ட முடிவுகளின்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதுவரை பிரிட்டனின் கடல் எல்லைக்குள் பிடித்துவந்த மீன்களின் அளவிலிருந்து 25 விகிதம் குறைவாகவே இனிமேல் பிடித்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட ஏற்பாடு வரும் ஐந்தரை வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்பு வருடாவருடம் இரண்டு பகுதியாரும் பேச்சுவார்த்தையிலிட்டு அந்தந்த வருடங்களுக்கான அளவுகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் எட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மட்டுமே பிரிட்டிஷ் கடல்பிராந்தியத்தி மீன் பிடிக்கின்றன. 

பாதுகாப்பு, சமூக ஒழுங்கு போன்ற விடயங்களில் ஒன்றிணைந்து இயந்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினரும், பிரிட்டரும் தத்தம் பொதுமக்களின் விபரங்களை மற்றைய பகுதியினருக்கு இதுவரை எவ்வித கட்டுபாடுமில்லாமல் திறந்து வைத்திருக்கத் தேவையில்லை. இரு பகுதியாரும் தேவைகள் எழும்போது மற்றைய பகுதியாரிடம் விபரங்களைக் கோரிப் பெற்றுக்கொள்ளலாம். எந்த ஒரு பகுதியாரின் பொலீசும் எதிர்ப்பகுதியாரின் பிராந்தியத்தில் இயங்குவதற்காக முன்பு பெற்ற சலுகைகள் போன்று தொடர்ந்தும் பெறமுடியாது.

கல்வியைப் பொறுத்தவரை சகல உயர்கல்வி மாணவர்களும் இரண்டு பகுதியின் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று தத்தம் அரச உதவிப்பணத்துடன் படிக்கலாம் என்றிருந்த “எராஸ்முஸ்” திட்டத்திலிருந்து பிரிட்டன் விலகும். 

உயர்கல்வி மாணவர்கள் இழக்கும் இந்தச் சலுகைக்குப் பதிலாக உலகப் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் பிரிட்டிஷ் உயர்கல்வி மாணவர்களுக்காக வேறொரு திட்டம் புதியதாகத் தனது அரசால் வெட்டிப் பொருத்தித் தைத்து அறிவிக்கப்படும் என்று போரிஸ் ஜோன்சன் உறுதி கூறியிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *