எல்லையில்லாத ஆனந்தம்| குட்டிக்கதை பேசும் அன்பினால் ஆனந்தம்

நமது அன்றாட வாழ்வில் பல நபர்களை கடந்து செல்கிறோம்.ஆனால் ஒரு சில நபர்களை மட்டும் ஏனோ நம்மால் மறக்க முடியாது,

அப்படி என்னால் மறக்க முடியாத நபர் யார் என்றால், அவன் ஒரு ஏழை பள்ளி மாணவன். தினந்தோறும் மாலை வேளையில் கல்வி பயில சில மாணவர்கள் என் வீட்டுக்கு வருவார்கள்.

ஒரு நாள் அந்த ஏழை மாணவன் என்னிடம் வந்து அக்கா நானும் வந்து படிக்கட்டுமா என்று கேட்டான். நானும் சரி என்றேன். அடுத்த நாள் முதல் தினந்தோறும் வந்து படித்துச் செல்வான்.

நன்றாக படிக்கக் கூடிய மாணவன். அவன் நண்பர்களிடம் நாளை என் பிறந்த நாள் என்று பேசிக் கொண்டிருப்பதே நான் கேட்டேன்.

பிறகு அவன் நண்பர்களை தனியே அழைத்து அவன் என்ன சொன்னான் என்று கேட்ட போது மாணவர்கள் சொன்னார்கள் அவன் வீட்டில் மிகுந்த கஷ்டம் இது வரை இனிப்பப்பம்( cake) வெட்டியது இல்லை, நண்பர்கள் , உறவினர் என்று யாரும் பரிசு தந்தும் இல்லை என்று வருத்தமாக அவன் கூறியதே சொன்னார்கள்.

மறுநாள் அந்த மாணவன் வரும்போது நான் இனிப்பப்பம் (cake) , நிறைய இனிப்பு கட்டிகள் மற்றும் அவன் படிப்பிற்கு தேவையான சில பொருட்களையும் வாங்கி அவன் நண்பர்களிடம் கொடுத்தேன். அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

இனிப்பப்பம்( cake) வெட்டச் சொல்லிய போது, அவன் அதை வெட்டாமல் கண்களில் கண்ணீர் தளும்ப என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என்னை பார்த்து எனக்கு இதுவரை இப்படி யாரும் செய்தது இல்லை என்றுக் கூறி எனக்கு முதலில் இனிப்பப்பம் ஊட்டினான்.

இனிப்புகளை சாப்பிட்டு பரிசுகளை ஒவ்வொருத்தராக கொடுத்தோம். அவன் முகத்தில் எல்லையில்லாத ஆனந்தம். அவன் பெற்றோருக்கும் இனிப்புகளை கொடுத்து அனுப்பினோம்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். நம்மால் முடிந்த அளவு அடுத்தவருக்கு உதவி செய்வோம். இறைவனை காண முடிகிறதோ இல்லையோ அந்த நொடி அவர்கள் முகத்தில் தோன்றும் சந்தோஷம் நம் மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாம் யாரையும் தேடிச் சென்று உதவி செய்யாவிட்டாலும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை இன்முகத்துடன் செய்வோம்.

எழுதுவது : க. சித்ரா
ஈரோடு