மாலி இராணுவத் தளத்தைத் தாக்கிய தீவிரவாதிகள் 27 இராணுவத்தினரைக் கொன்றனர்.
மேற்கு ஆபிரிக்காவிலிருக்கும் மாலியில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறையவில்லை. நாட்டின் நடுப்பகுதியிலிருக்கும் மொண்டோரோ நகரிலிருந்த இராணுவத் தளத்தை இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாக்கியிருப்பதாக அரசு தெரிவிக்கிறது. அந்த மோதலில் 27 இராணுவ வீரர்கள் இறந்திருப்பதாக மாலியின் இராணுவ அரசு தெரிவிக்கிறது.
மாலியில் மட்டுமன்றி அதைச் சுற்றியிருக்கும் புர்க்கினோ பாசோ, நைகர், நைஜீரியா ஆகிய நாடுகளிலும் கூட இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் சமீப வருடங்களில் பலமாகியிருக்கின்றன. அல் கைதா, ஐ.எஸ் ஆகிய இயக்கங்களின் ஆபிரிக்கக் கிளைகள் அப்பிராந்தியத்தில் இருக்கும் கொள்ளைக்காரர்களையும் திரட்டிக் கொண்டு அந்த நாட்டு இராணுவங்களைத் தாக்கி வருகிறார்கள். மூர்க்கத்தனமான அவர்களுடைய தாக்குதல்களின் விளைவாக பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாகப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மாலியின் அரச விபரங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இராணுவ வாகனங்கள் உட்பட மேலும் சில வாகனங்களை அங்கிருந்து கைப்பற்றியிருப்பதாகவும், இறந்த மாலி இராணுவத்தினரின் எண்ணிக்கை 40 – 50 வரையாக இருக்கலாம் என்றும் வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த இராணுவத் தளத்தில் சுமார் 150 இராணுவத்தினர் தங்கியிருந்தார்கள்.
மாலியில் அரசைக் கவிழ்த்த இராணுவத் தலைமை அந்த நாட்டில் இருந்த பிரென்ச் இராணுவத்தினர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவ மருத்துவ நிலையம் போன்றவைகளை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்திருந்தார்கள். பதிலாக, ரஷ்யாவிலிருந்து வாக்னர் என்ற தனியார் இராணுவத்தினரைப் பாதுகாப்புக்காக வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்