ரஷ்ய ஆக்கிரமிப்பின் பலனாக கிரிமியாவுக்கான நீர் மீண்டும் உக்ரேனிலிருந்து கிடைக்கிறது.
2014 இல் ரஷ்யா கிரிமியாவைக் கைப்பற்றிய பின் உக்ரேன் தனது பிராந்தியத்திலிருக்கும் Dnepr நதி வழியாக கிரிமியாவுக்கு நீரைக் கொடுக்கும் வழியை மீண்டும் திறந்திருக்கிறது. ரஷ்யாவிலிருந்து கிரிமியாவை இயங்கவைக்க நீர்வசதியை ஏற்படுத்துவது மட்டுமன்றி இரண்டு பாகங்களுக்கும் இடையிலான தரைவழியான தொடர்பும் அவசியம். அத்தொடர்புக்காக உக்ரேனின் மரியபோல் நகரத்தைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் நோக்கங்களிலொன்றாக இருக்கிறது.
அஸோவ் கடலின் துறைமுக நகரமான மரியபோல் டொம்பாஸ் பிராந்தியத்தினருகே உக்ரேனின் தென்கிழக்கில் இருக்கிறது. நிலக்கரிச் சுரங்கங்களிருக்கும் அப்பகுதியும், அவற்றை ஏற்றுமதி செய்ய அவசியமான மரியபோல் துறைமுகமும் உக்ரேனின் பொருளாதாரத்துக்கு முக்கியமானவை. உக்ரேன் மீது போர் ஆரம்பிக்கப்பட்டவுடன் அந்த நகரைச் சுற்றி வளைத்திருக்கின்றது ரஷ்ய இராணுவம்.
கிரிமியா தீபகற்பம் நீர் வசதியற்றது. அத்தேவையை நிறைவேற்ற சோவியத் காலத்தில் உக்ரேனின் Dnepr நதியிலிருந்து கால்வாய்த் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலமே தீபகற்பத்துக்குத் தேவையான 75 விகிதமான நீர் கிடைத்து வந்தது. கிரிமியா ரஷ்யாவைக் கைப்பற்ற முன்பு அங்கே சுமார் 130,000 ஹெக்டேர் நிலப்பகுதி விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. ரஷ்யா வசப்பட்டபின் அவ்விவசாயம் 14,000 ஹெக்டேராகக் குறுகியது.
ரஷ்யா 2014 இல் கிரிமியாவைக் கைப்பற்றித் தனதாக்கியவுடன் அந்தக் கால்வாயை அடைத்துவிட்டது உக்ரேன். பெப்ரவரி 24 ம் திகதி உக்ரேனுக்குள் ரஷ்யா புகுந்தவுடனேயே அந்த அடைப்புத் தகர்க்கப்பட்டுக் கிரிமியாவுக்கான நீர் மீண்டும் Dnepr நதிமூலம் எடுக்கப்பட ஆரம்பித்தாயிற்று என்று ரஷ்யா அறிவித்தது.
அஸோவ் கடலையும் கருங்கடலையும் இணைக்கும் மிகக் குறுகிய பகுதியிலிருக்கும் பாலம் ஒன்று மட்டுமே இதுவரை ரஷ்யாவையும் கிரிமியாவையும் தரையால் இணைத்து வந்தது. மரியபோல் நகரைக் கைப்பற்றுவதன் மூலம் ரஷ்யா அந்தத் தீபகற்பத்துடன் தரை வழியாக பொருட்களைக் கொண்டு செல்லவும், மக்கள் பயணிக்கவும் இலகுவான வழி உண்டாக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்