“எங்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை புத்தினுக்கு இரண்டு கண்களையும் போகவைப்போம்,” என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

 இதுவரை காலமும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிறைவேற்றுவதாகச் சொல்லிக்கொண்டிருந்த ரஷ்ய உயர்மட்டம் மீது குறிவைத்த பொருளாதாரத் தடைகள் ஒவ்வொன்றாக நடைமுறைக்கு வருகின்றன. புத்தின் மற்றும் அவரது நெருங்கிய வட்டத்தின் மீது ஓரிரு நாட்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட தண்டனையை விட அடுத்ததாக ரஷ்யாவின் முக்கிய வங்கிகள் “swift” பாவனையிலிருந்து விலக்கக்கப்படும்போது அவர்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.

“swift” என்றழைக்கப்படும் இலக்கங்கள் ஒரு வங்கியின் சர்வதேச அளவிலான அடையாளமாகும். சர்வதேச வியாபாரத்தில் ஈடுபடும் வங்கிகளும், விற்பனையாளர்கள், கொள்வனவாளர்களும் அந்த இலக்கத்தைப் பாவித்தே தமது வியாபாரங்களை வங்கிகள் மூலமாகச் செய்துகொள்ள முடியும். அந்த அடையாளம் இல்லாத வங்கிகள் சர்வதேச வர்த்தகத்திலிருந்து தூக்கியெறியப்படும்.

ஐரோப்பிய ஒன்றியம் தமது நேச நாடுகளான ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுடன் ஒன்றுசேர்ந்து ரஷ்யாவின் வங்கிகளில் முக்கியமானவற்றை  “swift” இலக்கப் பாவிப்பிலிருந்து தூக்கியெறியவிருப்பதாக ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண்டர் லாயன் தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அந்த நடவடிக்கையை எதிர்த்துவந்த நாடுகளான ஜேர்மனி, இத்தாலி, ஹங்கேரி போன்றவை ரஷ்யாவின் உக்ரேனிய ஆக்கிரமிப்பை அடுத்து அந்த நகர்வுக்குத் தமது ஆதரவை அளித்திருக்கின்றன.

ஞாயிறன்று எந்தெந்த வங்கிகளை “swift” பாவிப்பிலிருந்து விலக்குவது என்பது பற்றிய விபரங்கள் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களிடையே விவாதிக்கப்பட இருக்கிறது. 

அதேசமயத்தில் ஒன்றியமும் அதன் நேச நாடுகளும் தம்மிடமிருக்கும் ரஷ்யப் பெரும் பணக்காரர்கள், ரஷ்ய மத்திய வங்கி ஆகியவைகளின் சொத்துக்களையும் தடுத்துவைக்கவிருக்கின்றன. இந்த நடவடிக்கைகளின் குறிக்கோள் ரஷ்ய உயர்மட்டத்தின் பொருளாதார வசதிகளை மட்டுப்படுத்தி போரை நடத்துவதற்கான வழிவகைகளைக் குறைப்பதாகும்.

எடுக்கப்படவிருக்கும் இந்தப் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளையும் ஓரளவு பாதிக்கும். “swift”  அடையாளப்படுத்தலிலிருந்து ரஷ்ய வங்கிகள் விலக்கப்படும்போது ரஷ்ய நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்துவந்த ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கனவே விற்றிருந்தவைக்கான விலையைப் பெறமுடியாமல் போகும். திட்டமிடப்பட்டிருந்த விற்பனைகளும் முடங்க விற்பனையாளர்களுக்கும் அவர்களின் நாடுகளுக்கும் அது இடைஞ்சல்களை உருவாக்கும்.

ரஷ்யாவின் எரிவாயுவில் தங்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு வரவிருக்கும் நடவடிக்கைகள் கணிசமான நோவை ஏற்படுத்தும். அவர்களுக்கான எரிவாயுவை திரவ எரிவாயுவாக வேறிடத்திலிருந்து பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக உர்சுலா வொண்டர் லாயன் தெரிவித்தார். ஆயினும், ஏற்கனவே என்றுமில்லாத அளவுக்கு எரிபொருள் உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் அவற்றின் விலை மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

“புத்தின் உக்ரேனைத் தாக்கி அழிக்கும் திட்டத்தில் மட்டுமல்ல தனது சொந்த நாட்டின் எதிர்காலத்தையே பாழாக்கும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். புத்தினையும் அவரது நெருங்கிய அதிகார மட்டத்தையும் தண்டிக்கும்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் தாக்கம் ஏற்படும். ஆனாலும், ரஷ்ய அதிகாரத்தின் மீது சுத்தியலால் அடிப்பது போன்ற பலமான விளைவுகளை இது அவர்களுக்கே கொடுக்கும்,” என்கிறார் உர்சுலா வொண்டர் லாயன்.

சாள்ஸ் ஜெ. போமன்